×

10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை: விவசாயிகள் உயிரிழப்புக்கு மோடிதான் பொறுப்பேற்கணும்; காங்கிரஸ் சுளீர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நடைமுறை சாத்தியமற்றது என்றும் பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது. 2014 மக்களவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க., 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் நிறைவேற்றாத விவசாயிகள் விரோத அரசு மோடி அரசு என்று தான் கூற முடியும்.

இந்தியா 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிற போது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று கடந்த 28 பிப்ரவரி 2016 அன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை நினைவுகூர கடமைபட்டுள்ளோம். ஆனால், இன்றைய நிலையில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் வருமானம் குறைந்து 2022இல் கடன் சுமை ரூ.23 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடன் சுமைக்கு இலக்கான மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது. வங்கிக் கடன் மற்றும் பயிர்ச்சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிலைமை அதிகரித்துள்ளது. மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி 2014 இல் இருந்து 2023 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இவர்களது உயிரிழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டாமா? பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எனவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறை சாத்தியமானது எதுவோ அதை கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நியாய பத்திரமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இதை விமர்சனம் செய்வதற்கு மக்கள் விரோத பாசிச ஆட்சி நடத்திய பா.ஜவுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை: விவசாயிகள் உயிரிழப்புக்கு மோடிதான் பொறுப்பேற்கணும்; காங்கிரஸ் சுளீர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Suleer ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Congress party ,BJP ,2014 Lok Sabha elections ,
× RELATED சொல்லிட்டாங்க…