×

மாதவரம் தற்காலிக பழ மார்க்கெட்டில் விற்பனை பாதிப்பால் பல லட்சம் நஷ்டம்: வியாபாரிகள் வேதனை

திருவொற்றியூர்: கொரோனா முழு ஊரடங்கு காரணமாக மாதவரம்  பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக பழக்கடைகளில்  பழங்கள் வாங்க ஆள் இல்லாததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறாமல் தடுப்பதற்கு கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அங்கு இயங்கி வந்த காய்கறி கடைகள் திருமழிசைக்கும், பழக்கடைகள் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்திற்கும் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் அரசு சார்பில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன.

இங்கு, தற்போது சீசன் பழங்களான மாம்பழம், பலா, வாழை, மாதுளை ஆப்பிள் போன்ற பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.  இந்நிலையில், முழு ஊரடங்கு மற்றும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை பழங்கள் வாங்க தற்காலிக மார்க்கெட்டில் அனுமதிக்காது போன்ற காரணங்களால் பழங்கள் விற்பனை பெருமளவு பாதித்துள்ளது. மேலும், பேருந்து நிலையத்தின் மேல்தளத்தில் கடைகளுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது என்பதால்  வியாபாரிகள் தரை தளத்தில் உள்ள கடைகளில் மட்டும் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் மேல்தள வியாபாரிகள் பழங்கள் விற்பனையாகாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பல நாட்களாக விற்பனையாகாத பழங்கள்  அழுகி வீணாகி வருகிறது. இதனால் வியாபாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பஸ் நிலையத்தின் முதல் தளத்தில் அமைத்துள்ள கடைகளுக்கு வியாபாரிகள் பழங்கள் வாங்க வராததாலும், சில்லறை வியாபாரிகளை உள்ளே அனுமதிக்காததாலும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் உள்ள பழங்கள் விற்பனையாகாததால், குப்பையில் வீசும் நிலை உள்ளது. இதன்மூலம் எங்களுக்கு பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சில்லறை வியாபாரிகளை சமூக இடைவெளியுடன் உள்ளே அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : fruit market ,Hundreds ,millions ,merchants , Monthly, Temporary Fruit Market, Sales, Loss
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் 4 டன்...