×

நத்தம் அருகே உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு வீடு அன்பளிப்பு

நத்தம்: நத்தம் அருகே உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு இளைஞர்கள் வீடு கட்டி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் பேஸ்புக் மூலம் இணைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘பசியில்லா நத்தம்’ என்ற அமைப்பு மூலம், பசியால் வாடும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்த சின்னம்மாள் (85) என்ற மூதாட்டிக்கு உணவுப்பொருள் வழங்க சென்றனர்.

அப்போது அந்த மூதாட்டி உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததையும், சேதமடைந்த வீட்டில் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வந்ததையும் கண்டனர். இதையடுத்து இளைஞர்கள், ‘சிறுகுடி நலம் விரும்பிகள் குழு’ உறுப்பினர்களுடன் இணைந்து சின்னம்மாளுக்கு வீடு கட்டி தரும் முயற்சியில் இறங்கினர். இதற்காக நத்தம், சிறுகுடி பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நிதியுதவி வழங்கினர். இதன்மூலம் ஒரு மாதத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டு நேற்று இதன் திறப்பு விழா நடந்தது. நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வீட்டை திறந்து வைக்க, மூதாட்டியிடம் வீடு ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு வீடு கட்டி தந்த இளைஞர்களை பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் மனதார பாராட்டினர்.

Tags : relatives ,Natham , Naththam , grandparent, house gift
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...