×

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை : முழுஊரடங்கு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலால் வருகிற 30ம் தேதி சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 25.03.2020 முதல் 14.07.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை 15.07.2020 வரை தாமத மின்கட்டணம் மற்றும் மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம். அதுவரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என்று மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை மின் கணக்கீட்டு தேதி உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாத மின் கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் கணக்கிடப்படும். தமிழக அரசின் உத்தரவுபடி வங்கிகள் செயல்படாது என்பதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டண வசூல் மையங்கள் 19.06.2020 முதல் 30.06.2020 வரை செயல்படாது.

அதேநேரம், மின்நுகர்வோர்கள் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையதள வழிகளான வலையதள வங்கியியல், தொலைபேசி வங்கியியல், பேமெண்ட் கேட்வே, பிபிபிஎஸ் ஆகியவை மூலம் 19.06.2020 முதல் 30.06.2020 வரையுள்ள காலத்தில் மின்கட்டணம் செலுத்தலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : districts ,Lockdown ,Chennai , EB Bills, lockdown,Chennai
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...