×

கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் சிறை பிடித்த 10 இந்திய வீரர்கள் விடுவிப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு

புதுடெல்லி : கடந்த திங்கட்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட 10 இந்திய ராணுவ வீரர்கள், இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஒரு மாதமாக இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதை, இந்திய ராணுவம் எதிர்த்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இருநாட்டு வீரர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சீன மறுத்து விட்டது. இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இதை தணிப்பதற்காக, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 இதன் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மோதலின் போது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட 4 அதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீனா ராணுவம் விடுவித்துள்ளது. அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் பொய் அம்பலம்
கல்வான் மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக தகவல் வெளியானது. ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் இதை மறுத்தன. இந்திய வீரர்கள் யாரும் சீனாவிடம் சிக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறி வந்தன. இந்நிலையில், 10 வீரர்களை சீன ராணுவம் விடுவித்து இருப்பதின் மூலம், மத்திய அரசு கடந்த 3 நாட்களாக பொய் தகவலை அளித்து வந்துள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது.

‘இப்போதைக்கு இந்திய வீரர் யாரும் எங்களிடம் இல்லை’
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது சீனாவில் சிறை பிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் விடுக்கப்பட்டனர். இது தவிர வேறு வீரர்கள் யாராவது அதன் பிடியில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சீனா வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாகோ லிஜியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எனக்கு தெரிந்த வரை சீனா தற்போது எந்த இந்திய வீரரையும் பிடித்து வைத்திருக்கவில்லை. சீனாவும், இந்தியாவும் தூதரக ரீதியிலும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் மோதல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. சீன வீரர்கள் யாரையாவது இந்திய ராணுவம் பிடித்து வைத்துள்ளதா என்ற கேள்விக்கு,  இப்போது என்னிடம் எந்த பதிலும் இல்லை,” என்றார்.

திபெத்தில் கொந்தளிப்பு
இந்திய வீரர்களை சீன ராணுவம் கொன்றதற்கு, திபெத்தை சேர்ந்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மெக்லியோட்கஞ்ச்சில் உள்ள தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று அளித்த கூட்டு பேட்டியில், ‘இந்த நேரத்தில் திபெத் சமூகமானது இந்தியாவுக்கு ஆதரவாக துணை நிற்கும். இந்திய வீரர்கள் மீதான சீனாவின் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். உலகம் முழுவதும் உள்ள அரசுகள், தலைவர்கள் இந்தியாவுடன் ஒன்றிணைவதன் மூலமாக சீனாவின் மீதும், அதன் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தினர்.


Tags : soldiers ,Indian ,prison ,conflict ,Calvan Valley ,talks ,China , china,India,Ladakh border,Indian Army
× RELATED கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20...