×

சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது கல்வான் இந்தியாவுக்கே சொந்தம்

*வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்

புதுடெல்லி : ‘கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு இறையாண்மை உண்டு என்பதை ஏற்க முடியாது. இது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு. கல்வான் இந்தியாவுக்கே சொந்தம்,’ என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
கிழக்கு லடாக் எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்களன்று இரவு இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே  ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ தரப்பில் 43 பேர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, ‘லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கும் இறையாண்மை உள்ளது. அதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது’ என சீன வெளியுறவுத்துறை கூறியது இந்தியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது.

இதற்கு உடனடியாக இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் வஸ்தவா நேற்று முன்தினம் நள்ளிரவில் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 6ம் தேதி நடந்த இந்தியா, சீனா லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ராணுவ படைகளை விலக்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சர், சீன அமைச்சரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார். மேலும், லடாக்கின் தற்போதைய நிலவரம் குறித்தும் இரு தரப்பு அமைச்சர்கள் தொலைபேசி பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இருதரப்பிலும் லடாக்கில் உள்ள சூழலைப் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுடையது, அதில் இறையாண்மை இருக்கிறது எனச் சொல்லும் சீனாவின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது. அதை ஏற்க முடியாது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தமானது. இந்திய வீரர்கள் யாரும் சீனாவால் பிடித்து செல்லப்படவில்லை என்றார்.

முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், லடாக்கில் நடந்த அசாதாரணமான சம்பவம் இரு தரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சீன ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கல்வான் யாருக்கு சொந்தம்?

குலாம் ரசூல் கல்வான், லடாக்கில் 1878ல் பிறந்தவர். சிறந்த மலையேற்ற வீரர். காரகோரம், கே2, பாமிர் மலைகளில் அசாத்தியமாக ஏறி சாதனை படைத்தவர். மிகச் சவாலான இந்த மலைகளில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆய்வுப் பணி மேற்கொள்ளவும், இங்கிலாந்து ராணுவம் பயணம் செய்யவும் உதவியவர். 1890 மற்றும் 1896ம் ஆண்டுகளில், கல்வான் ஆங்கிலேய-திபெத்திய ஒப்பந்தத்தை உருவாக்கிய சர் பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்டுடன் இமயமலை பகுதிகளில் நீண்ட பயணம் செய்தார்.

இது, ஆங்கிலேய அரசாங்கத்திற்கும், ஆசியா, திபெத், சீனா மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளுக்கும் நீண்டகால வர்த்தக உறவுகளை மேம்படச் செய்தது. எனவே, ரசூலை போற்றும் விதமாக கல்வான் ஏரிக்கும், கல்வான் பள்ளத்தாக்கிற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. கல்வானுக்கும் இந்தியாவுக்கும் 200 ஆண்டுகால தொடர்பு இருக்கிறது.

Tags : India ,China , China cannot accept the claim: India's own kalvan
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...