×

தேனி சுற்றுப்புற பகுதிகளில் பரவும் கொரோனா: அச்சத்தில் கிராம மக்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கிராமங்களிலும் பரவி வருகிறது. இதனால் கிராமமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து இதுவரை மொத்த பாதிப்பு 164ஐ கடந்துள்ளது. இன்றும் சிலருக்கு தொற்று பாதிப்பு குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள சில முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கும், அவர்கள் மூலம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தேனி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மட்டுமே கொரோனா தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டனர். தற்போது கிராமப்பகுதிகளிலும் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்தே கிராம மக்களுக்கு தொற்று பரவி வருகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது. தேனியில் உள்ள ஒரு தனியார் உணவக பணியாளருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட நபர்கள் தானாக முன்வந்து பரிசோதனைக்கு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை தேனி மாவட்ட நிர்வாகமோ, போலீஸ் நிர்வாகமோ, மருத்துவ, சுகாதாரத்துறையோ வெளியிடவில்லை. இருப்பினும் இப்படி உலா வரும் தகவல்களை இந்த 4 துறைகளும் மறுக்கவில்லை. இதனால் தேனி நகர் பகுதியில் கலக்கம் அதிகரித்துள்ளது. இவ்வளவுக்கும் தற்போது தொற்று கண்டறியப்பட்ட தனியார் உணவகம் மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனியில் பல கிளைகளை இந்த உணவகம் கொண்டுள்ளது. இங்கேயே இப்படி என்றால் பெரும்பாலான உணவகங்களில் உள்ளே சென்றால் சாப்பிடும் எண்ணமே மாறி விடும். அந்த உணவகங்களில் நிலை எப்படி இருக்கும்.

கொரோனா துவக்க காலத்தில் டீக்கடைகளில் பேப்பர் டம்ளர்களில் டீ, காபி போட்டுக்கொடுத்தனர். தற்போது மீண்டும் கண்ணாடி டம்ளருக்கு மாறியுள்ளனர். இந்த கண்ணாடி டம்ளர்களை ஒரு சில கடைகளில் மட்டுமே நன்றாக கழுவுகின்றனர். ஓரிரு கடைகளில் மட்டுமே சுடுதண்ணீரில் கழுவுகின்றனர். பெரும்பாலானோர் பழைய வழக்கப்படி பயன்படுத்தப்பட்ட டம்ளர்களை அலசி விட்டு அப்படியே அடுத்த நபருக்கு டீ போட்டு தருகின்றனர். இதனை பார்த்தே பலர் டீக்கடைகளுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். சிலர் வேறு வழியில்லாமல் குடிக்கின்றனர்.

இது போன்ற சுகாதாரமற்ற சூழ்நிலை தேனியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் ஓட்டல், டீக்கடை உரிமையாளர்களை அழைத்து தற்போதய நிலையில் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : neighborhoods ,Theni ,Theni Neighbors ,Coronavirus Spreading: Fear Villagers , Theni, Corona, villagers
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு