×

ஏழை எளிய மக்களின் நலன் கருதி நடவடிக்கை; சென்னை உட்பட 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் நாளை முதல் 30-ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி  அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  தமிழகத்தில், ஊரடங்கு நீடித்தாலும், கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது.  ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி சுமார் 1,500ஐ தாண்டும் நிலை  ஏற்பட்டது.

தொடர்ந்து, மருத்துவ குழுவினரின் பரிந்துரையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி நள்ளிரவு  வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நாட்களில் வங்கிகள் 10  நாட்கள் மூடப்படும். கடைகள்,  பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும்  வழங்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளான 21, 28ம் தேதிகளில் மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுவதாக  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை எளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31.05.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தபட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது, இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து இந்த உணவை, விலையில்லாமல் தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இந்த நடைமுறை நாளை 19.06.2020 முதல் 30.06.2020 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,district mom restaurants ,Chennai ,Poor ,Simple People of Action , Action for the benefit of the poor and simple people; Chief Minister Palanisamy has ordered free food to be served at all 3 district mom restaurants in Chennai
× RELATED பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி