×

சென்னையில் பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்க முடிவு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திருவொற்றியூர்: சென்னையில் நாளை முதல் 30ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். திருவொற்றியூர், மணலி மண்டலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மணலி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தேவையான கவச உடை,  முகக்கவசம், கபசுர சூரணம் உள்ளிட்டவைகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது,  கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.  பேரிடர் காலத்தில் மக்கள் மன உறுதியுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற அவசர காலங்களில் அச்சத்தை தவிர்த்து மக்களை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வரும் 19ம் (நாளை) முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு பொது முடக்கம் சென்னையில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1000 நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பொது முடக்க காலத்தில் பொது மக்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய் தொற்று இல்லாத சென்னை மாநகரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
 
மேலும், பொது முடக்க காலத்தில் அவரவர் வீடுகளுக்கு சென்று காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்களை இணைத்து செயல்படவும் பொதுமக்கள் இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது குறித்தும் தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார். திருவொற்றியூர், மணலி பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

தென்னக ரயில்வே சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு வசதிகள் கொண்ட ரயில்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து முதலமைச்சர் பழனிசாமி உரிய நேரத்தில் முடிவெடுப்பார். தற்போதைய நிலையில் போதுமான படுக்கை வசதிகள் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன என்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளர் பங்கஜ் குமார் பன்சால், சிறப்பு அதிகாரி அமர், சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி, வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Tags : RB Udayakumar ,houses ,freeze ,Chennai , Chennai, General Freeze, Essential Products, Minister RB Udayakumar
× RELATED அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் இனி...