×

மேலக்கோட்டையூர் தனிமைப்படுத்தல் முகாமில் கழிப்பறையில் விழுந்து முதியவர் பரிதாப சாவு: அதிகாரிகளின் அலட்சியத்தால் விபரீதம்

திருப்போரூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பஸ், ரயில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா, பணி, உறவினர் வீடுகளுக்கு சென்ற லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்தனர். இதில், இந்தியாவுக்கு வர விருப்பம் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களில் 14,800 பேரை அழைத்து வர 64 சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கடந்த மே 8ம் தேதி இரவு துபாயில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.இதை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன் ஆகிய பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கடந்த 12ம் தேதி மலேசியாவில் இருந்து 230 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இவர்களில் 170 பேர் சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை சேர்ந்த 63 வயது முதியவரும் தங்கினார். கடந்த 13ம் தேதி, முதியவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி, அவருடன் தங்கியவர்கள், முகாமில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு, கொரோனா தொற்று உறுதியானவர்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் சென்று விட்டதால், வேறு வாகனம் இல்லை. 14ம் தேதி மருத்துவ குழு வந்து பரிசோதனை செய்வார்கள். அவர்களிடம் உங்கள் பிரச்னையை கூறினால் மருந்து கொடுப்பார்கள் என கூயுள்ளனர். இதனால், உடல் நலிவுற்ற நிலையிலும் வேறு வழியின்றி முதியவர், முகாமிலேயே தங்கினார். கடந்த 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்களோ, சுகாதாரப் பணியாளர்களோ வரவில்லை.

இந்நிலையில் 14ம் தேதி இரவு முதியவர் திடீரென காணாமல் போனார். அவருடன் தங்கியவர்கள், முதியவரை தேடியபோது, முகாமில் உள்ள கழிப்பறையில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரது உடல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், வெளிநாடு சென்று திரும்பிய முதியவர் இறந்தது அங்கு தங்கியுள்ளவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சுமார் 75 நாட்கள் அவர் மலேசியாவில் பாதுகாப்பாக இருந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த 2 நாட்களில் அவர் இறந்துள்ளார். இதுதான் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களை அரசு பாதுகாக்கும் லட்சணமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 1002 பேர்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் மேலக்கோட்டையூர் விஐடி கல்லூரி முகாமில் 550 பேரும், ரத்தினமங்கலம் தாகூர் கல்லூரி முகாமில் 212 பேரும், பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லூரி முகாமில் 240 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : isolation camp , Malekottaiyur, toilet, old man, death
× RELATED சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் 38...