×

மாநிலம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் கணினி உதவியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: 100 நாள் வேலை பணியாளருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

வேலூர்: பணிநிரந்தரம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கணினி உதவியாளர்கள் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அனைத்து பதிவேடுகளையும் கணினி மூலம் பராமரிக்கும் பணியை கவனிக்க, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 2 கணினி உதவியாளர்கள் கடந்த 2007ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் தற்போது ₹12 ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2017 மார்ச் 22ம் தேதி அரசாணை எண் 37 பிறப்பிக்கப்பட்டது.

இதில் இவர்களின் கோரிக்கைகள் பலவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் தங்களை இளநிலை உதவியாளர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தவும், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும், பணியின்போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கு வழங்கப்படுவது போன்று ₹3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்கள் நேற்று தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த போராட்டத்தால் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Periodic Strike of Computer Assistants in Statutory Unions ,State ,Computer Assistants ,Panchayat Unions , Periodic Strike, Computer Assistants , Panchayat Unions ,State
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...