×

காடுகள் அழிப்பே கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் உருவாக காரணம்: மணிப்பூர் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: காடுகள் அழிப்பே கொரோனா போன்ற நோய் உருவாக காரணமாக உள்ளதாக மணிப்பூர் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மேற்கு இம்பாலை சேர்ந்த மணிப்பூர் பள்ளத்தாக்கு  காப்புக்காடுகள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அங்கோம் தோம்பா (58) தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் பள்ளத்தாக்குகளில் உள்ள காப்புக்காடுகள் சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. ஆக்ரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மணிப்பூர் அரசுக்கும், முதல்வருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 15ல் மனு கொடுத்தேன். 2019 செப்டம்பர் 20ல் பிரதமருக்கும் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.சுதாகர், நீதிபதி ஏ.பிமோல் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தருண் குமார், மணிப்பூர் அரசு சார்பில் அம்மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் லெனின், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: வழக்கு விசாரணையின்போது மனுதாரர் மணிப்பூரில் உள்ள காடுகள் பாதுகாப்பு தொடர்பான அரசின் ஆவணங்களையும், வரைபடங்களையும் தாக்கல் செய்தார். நுண்கிருமியான ஒரு வைரஸ் தற்போது உலகத்தையே துண்டு, துண்டாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. 2020ல் கண்ணுக்கு தெரியாத செல்கள் மனிதகுலத்தையே அழித்து வருகிறது.

 மனித இனம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகிறது. மனித இனத்தை தாண்டி இந்த கொரோனா வைரஸ் வாழத்தொடங்கியுள்ளது.
இதற்கு உடனடியாக மருந்து கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் சேர்ந்துதான் இந்த கொரோனா வைரசுக்கு தீர்வு காண முடியும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பால்தான் இதுபோன்ற வைரஸ்களின் தாக்கம் ஏற்படுகிறது என்பதற்கான ஆய்வுகள் பல உள்ளன.   இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள காடுகளில் ஏற்பட்ட அழிவால்தான் பல நோய்கள் உருவானதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வனம் சார்ந்த பல்வேறு நோய்களும் மக்களை தாக்கியுள்ளது.  தென் அமெரிக்காவில் மஞ்சள் காமாலை, ஆப்ரிக்கா மற்றும் இந்திய பகுதிகளில் சிக்குன் குனியா, ஆப்ரிக்காவில் எபோலா, தெற்கு ஆசியாவில் நிபா வைரஸ், தென்கிழக்கு ஆசியாவில் சார்ஸ், உலக அளவில் ரேபிஸ், தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா போன்ற வைரஸ்கள் காடுகளை சார்ந்தே உருவாகியுள்ளன. எங்கெல்லாம் காடுகள் அழிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் எதாவது ஒரு வகையான நோய் கிருமி உருவாகும் என்று சோலா காடுகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 அதேபோல்தான் தற்போதும் காடுகள் அழிக்கப்பட்டதால்தான் கொரோனா போன்ற நோய் தொற்று அழிவுகள் உருவாகியுள்ளன. அழிக்கப்படும் காடுகள் மீண்டும் பழைய நிலைக்கே வருவதை உறுதி செய்தால் மட்டுமே இதுபோன்ற பேரிழப்புகளில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள முடியும். ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றம் காடுகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

காடுகளை அழிவில் இருந்து மீட்க வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 2006ல் உச்ச நீதிமன்றம் கோதாவர்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், காடு வளர்ப்பு, பாதுகாத்தல், காடுகளில் தீ பரவாமல் தடுத்தல் ஆகியவை குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ளது.  அதுமட்டும் அல்லாமல் காட்டு விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றை பாதுகாத்து சுற்றுச்சூழலை உறுதிபடுத்த வேண்டும் என்று வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். எனவே, காடுகளை அழிப்பதாலும், வனப்பகுதிகளில் மனிதர்கள் ஊடுருவல் அதிகரிப்பதாலும்தான் கொரோனா போன்ற மிகமோசமான நோய்கள் உருவாகிறது என்று சார்லஸ் ஸ்மிட் என்ற நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சோதனை பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாடுகள் ஊரடங்கு முறையை அமல்படுத்தியதால் அந்த நாடுகளில் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகள் நோய் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே கொரோனா வைரசை வெல்ல முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளன. சில நாடுகள் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை சோதனை செய்து அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இதையெல்லாம் தாண்டி கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை பேரழிவுக்குள் தள்ளியுள்ளது.

அறிவியல் பூர்வமான எல்லா முயற்சிகளும் இறுதிக்கட்டத்திற்கு வரவில்லை. கொரோனா வைரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் மக்கள் வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை இழப்பு ஏற்படும். விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உணவு பற்றாக்குறை, பசி ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் தொகை அதிகரிப்பதால் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால்தான்  தற்போது நாம் சந்தித்துக்கொண்டு வரும் நோய்தொற்று போன்றவை உருவாகியுள்ளன.
 மனுதாரர் கோரியது போல் மணிப்பூரில் உள்ள காடுகள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள காடுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக சில நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் ஆக்ரமிப்பு செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதி எல்லைகளை வரையறுக்க வேண்டும். வனப்பகுதி அருகில் உள்ள மக்களுக்கு காடுகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
காடுகள் பற்றிய கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள் அளவிலேயே மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் அமைக்கப்பட வேண்டும். பொது சுகாதார அதிகாரிகள் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் வன அதிகாரிகள் இணைந்து வனப்பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.  இந்த ஆய்வு பணி மற்றும் சோதனைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கனவே அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு உரிய முறையில் இந்த நிதி செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இந்த பொதுநல வழக்கின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 33 சதவீத இடங்கள் வனப்பகுதியாகும். இதை காக்க வேண்டும்.  சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்க வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தில் நாம் இருக்கிறோம். எனவே, மத்திய அரசு வனப்பகுதிகளை காப்பதற்கும், அவற்றை மீட்பதற்கும் ஒதுக்கிய நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கையை மணிப்பூர் மாநிலம் தாக்கல் செய்ய வேண்டும். எங்கெல்லாம் காடுகள் அழிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் எதாவது ஒரு வகையான நோய் கிருமி உருவாகும் என்ற சோலா காடுகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்
1 ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றம் காடுகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
2 காடுகள் அழிப்பதாலும், வனப்பகுதிகளில் மனிதர்கள் ஊடுருவல் அதிகரிப்பதாலும்தான் கொரோனா போன்ற மிகமோசமான நோய்கள் உருவாகிறது என்று சார்லஸ் ஸ்மிட் என்ற நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
3 இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள காடுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
4 காடுகள் பற்றிய கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள் அளவிலேயே மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

Tags : Deforestation ,Manipur High Court , Deforestation , viral diseases , coronavirus, Manipur High Court
× RELATED மெய்தி பிரிவினரை பழங்குடியினர்...