×

கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் தயாரிக்கும் பணி: ஆகஸ்ட் இறுதிக்குள் முடியும்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையம் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதில் சிக்கும் பலர் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். அதேபோல நாள்பட்ட நீரிழிவு நோயால் ஆறாத புண், புகைப்பிடிப்பதால் கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஆகியவற்றாலும் சிலரின் கால்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு கை, கால்களை இழந்தவர்கள் செயற்கை உறுப்புகளை செலவில்லாமல் பொருத்துவதற்கு சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையிலேயே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக கோவை அரசு மருத்துவமனை முட நீக்கியல், விபத்து கிசிச்சை துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறுகையில், வெளியில் செயற்கை உறுப்புகளை பொருத்தினால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

செயற்கை உறுப்புகளை பொருத்திய பிறகு யார் துணையும் இல்லாமல் தானாக நடக்கும் அளவுக்கு பயிற்சி அளிக்கவும் பிரத்யேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்குள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் மாதத்துக்கு 10 பேர் பயன்பெறுவார்கள். மேலும் இங்கு எடை குறைந்த செயற்கை உறுப்புகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார். என்றார்.

Tags : Goa Government Hospital ,Artificial Legs Making , Coverage, government hospital, artificial legs, mission, end of August, can
× RELATED கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு