×

பல நாட்களுக்கு முன் உயிரிழந்தவர்களை சுகாதார துறை நேற்று கணக்கு காட்டியது: இறப்பு விவகாரத்தில் குழப்பத்துக்கு மேல் குழப்பம்

சென்னை: பல நாட்களுக்கு முன் உயிரிழந்தவர்களை நேற்று சுகாதாரத் துறை கணக்கு காட்டியிருப்பதான் மூலம் இறப்பு கணக்கில் குழப்பத்துக்கு மேல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா இறப்பை மறைப்பதாக குற்றச்சாட்டு இருந்து நிலையில் இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மிக கடுமையான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி விட்டது. தினமும் 1500 என்ற அளவில் இந்த வரை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வார்டுகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கி விட்டன. அதேநேரம் இந்திய அளவில் தமிழகத்தில் இறப்புகள் குறைவாக இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இறப்புகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் தினமும் சராசரியாக 20 பேர் வரை உயிரிழக்கின்றனர். ஆனால் தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் கொரோனா பற்றிய அறிவிப்பில் ஒருசில தினங்களுக்கு முன் எனக் குறிப்பிட்டு குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் கணக்கு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, தினமும் ஏற்படும் இறப்பு எண்ணிக்கைகளை பெருமளவில் சுகாதாரத்துறையினர் மறைத்து விடுவதாக புகார் எழுந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் சென்னையில் கொரோனாவால் இறப்பவர்களின் பட்டியலில் மாநகராட்சியின் தகவலுக்கும், தமிழக சுகாதாரத் துறையினர் அளிக்கும் தகவலுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாகவும் எழுப்பப்பட்ட புகாரானாது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கும் என்றும், ஆனால் குறைந்த அளவிலேயே கணக்கு காட்டப்படுவதாகவும் தமிழக சுகாதாரத் துறையினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா இறப்பு கணக்கு என்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளில் பல நாட்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களை நேற்று கணக்கு காட்டியிருப்பது குழப்பத்துக்கு மேல் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதாவது, நேற்றைய கொரோனா இறப்பு கணக்கில் மொத்தம் 30 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதில் 12 பேர் தனியார் மருத்துவமனையில் இறந்தவர்கள் என்றும், 18 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்கள் என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர் 12 பேர் இறப்பு குறித்த பட்டியலை பார்க்கும் போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எல்லாம் நேற்று இறந்தவர்கள் அல்ல. பல நாட்களுக்கு முன்பு இறந்தவர்களை நேற்று இறந்ததாக காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த பட்டியலில் நோய் அறிகுறி இல்லாமல் இறந்த இரண்டு பேரில் ஒருவர் திருவள்ளூரை சேர்ந்த 76 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 24ம்தேதி இறந்துள்ளார். மற்ற ஒருவர் சென்னையை சேர்ந்தவர் 70 வயது முதியவர் நேற்று இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் அறிகுறியுடன் இறந்த 10 பேரில், 73வயது முதியவர் கடந்த 28ம்தேதியும், 69 வயது முதியவர் கடந்த மாதம் 31ம்தேதியும், 27 வயது பெண் ஒருவர் கடந்த 2ம்தேதியும், 79வயது முதியவர் கடந்த 3ம்தேதியும், 77 வயது முதியவர் கடந்த 5ம்தேதியும், 68வயது முதியவர் கடந்த 11ம்தேதியும், 68வயது பெண் ஒருவர் கடந்த 11ம்தேதியும், 75 வயது முதியவர் ஒருவர் கடந்த 11ம்தேதியும், 45 வயது பெண் ஒருவர் கடந்த 11ம்தேதியும், 71வயது பெண் சென்னை தெற்கு ரயில்வேக்கு சொந்தமான மருத்துவமனையில் கடந்த 11ம்தேதியும் இறந்துள்ளனர். அவர்களின் இறப்பு பட்டியலை நேற்றைய இறப்பு பட்டியலில் தமிழக சுகாதாரத்துறை சேர்த்து காட்டியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக தமிழக சுகாதாரத்துறை மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இப்போது ஏற்கனவே இறந்தவர்களை நேற்றைய கணக்கில் கொண்டு வந்தது ஏன் என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை விடையளித்தால் தான் மக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : deaths ,Health Department , Health Department, yesterday , deaths ,several days ago,Confusion over mortality
× RELATED புதிய வகை கொரோனா; பொது இடங்களில்...