×

அசோக் கெலாட் நேரடி குற்றச்சாட்டு: ராஜஸ்தான் ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சி

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சி செய்கிறது,’ என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேரடியாக குற்றம்சாட்டி உள்ளார். சமீபத்தில் கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜ அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது, ராஜஸ்தானில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அங்கு வரும் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜ தங்கள் கட்சி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரைப் பேரம் நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அதோடு, கட்சி எம்எல்ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ.க்களை காங்கிரஸ் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளது.
அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பாஜ அரசியல் சாசனத்திற்கு எதிராக நடந்து கொள்வதாக சட்டப்பேரவை சபாநாயகரிடமும், குதிரைப் பேரம் நடப்பதாக வருமான வரித்துறையிடமும், மாநிலத்தின் சிறப்பு விசாரணை குழுவிடமும் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து முதல்வர் அசோக் கெலாட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்ததைப் போல ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜ தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்காக பல கோடியில் பணம் புழங்குகிறது. இதைப் பற்றி சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்துள்ளோம். பாஜவின் மத்திய தலைமைதான் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் யார் என்பதைப் பற்றி விரைவில் மக்களிடம் தெரிவிப்போம். பாஜ.வில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுப்பது நல்லதல்ல. இப்படி ஆட்சியை கவிழ்ப்பது ஜனநாயகப் படுகொலையாகும். ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசை எதிர்த்து போராடும் நேரத்தில், யார் வலியை தருகிறார்கள், யார் மருந்தை தருகிறார்கள் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,’’ என்றார்.

ராஜஸ்தானில் வரும் 19ம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடக்கிறது. சட்டப்பேரவையில் கட்சியின் பலத்தை பொறுத்து, காங்கிரஸ் 2 சீட்களில் வெல்ல முடியும். பாஜ.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே கிடைக்கும். ஆனால், பாஜ 2 வேட்பாளர்களை களமிறக்கி, எப்படியும் 2 இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது. இதற்கு, 12 சுயேச்சைகள் ஆதரவு கிடைத்தால் சாத்தியமாகும் வாய்ப்புள்ளதால், பாஜ-காங்கிரஸ் இடையே மோதல் வலுத்துள்ளது.

Tags : Baja ,Rajasthan ,Ashok Gehlot , Ashok Gelat, Rajasthan Rule, BJP
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...