×

வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா படுக்கைகள் நிரம்பிவிடும்: மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் பாதிப்பு மிக கடுமையாக இருக்கிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் தரப்பில் தரப்பட்ட புள்ளி விவரங்களின்படி, அடுத்த மாதத்திலேயே தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 8ம் தேதியுடன் ஐசியு படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும், வென்டிலேட்டர்கள் ஜூலை 27ம் தேதியிலேயே நிரம்பி விடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, தமிழகத்தில் ஐசியு படுக்கைகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதியும், தனிமை வார்டு படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவைகளுக்கு ஜூலை 21-லும் பற்றாக்குறை நிலவத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் மருத்துவமனை திறனை உறுதி செய்ய வேண்டுமென ராஜிவ் கவுபா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். ‘மருத்துவமனைகளில் படுக்கை திறன், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடுத்த 2 மாதத்திற்கு போதுமான அளவில் இருப்பதை மாநிலங்கள் உறுதிபடுத்த வேண்டும். சுகாதார அமைப்பில் சுமையை குறைக்க, நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியம்,’ என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் தொற்று 20 சதவீதமாக உள்ளது
‘தற்போதைய நிலை நீடித்தால் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த மாதத்தில் இருந்தே சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளில் கடும் சிக்கல்கள் நிலவ வாய்ப்புள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மும்பை, தானேவிலும், தமிழகத்தில் சென்னையிலும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 20 சதவீதமாக இருக்கிறது. கொரோனா பாதித்த மொத்த நோயாளிகளில் 76 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்,’ என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Tags : states ,government ,Corona ,Tamil Nadu ,Central , Ventilator, Medical Equipment, Tamil Nadu, 5 States, Corona, Central Government
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...