×

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர், கொரோனா வார்டு அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பூந்தமல்லி அரசு மருத்துவமனை என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். கடந்த சில தினங்களாக, நாடு முழுவதும் சில இடங்களில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதும், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுவதுமாக உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 51 வயதான ஆண் ஒருவர், கடந்த 6ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று காலை வார்டில் உள்ள படுக்கையில் இல்லாதது கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வார்டு முழுவதும் தேடினர். வார்டு அருகே லிப்ட் சாரத்தில் அவர், வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது சக நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்தனர். விசாரணையில், தற்கொலை செய்த நோயாளி, மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னை அரசு மருத்துவமனைகளில் 2 கொரோனா நோயாளிகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் தற்கொலை நடந்துள்ளது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Coroner suicides ,Tiruvallur Government Hospital Tiruvallur Government Hospital , Thiruvallur Government Hospital, Corona Patient, Suicide
× RELATED மதுரையில் தற்கொலைக்கு முயன்ற கொரோனா நோயாளி உயிரிழப்பு