×

ஸ்ரீரங்கம் தீ விபத்தில் 64 பேர் பலியான வழக்கு: இழப்பீடாக 40 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும்: மண்டப உரிமையாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பத்மபிரியா திருமண மண்டபத்தில் கடந்த 23.1.2004ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மணமகன் குருராஜன் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, வீடியோ ஒளிப்பதிவாளர் மணச்சநல்லூர் தர்மராஜ் (42), அவரது உதவியாளர் பாலாஜி, பந்தல் அமைத்த செல்வம், மண்டப உரிமையாளர் பாலக்கரை ராமசாமி, மேலாளர் சடகோபன், எலக்ட்ரீசியன் முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து, மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை, சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனை, முருகேசனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து கடந்த 13.6.2012ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ராமசாமியின் வயது மூப்பு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 3 மாதமாக குறைக்கப்படுகிறது. உறுதியளித்தபடி ரூ.40 லட்சத்தை திருச்சி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக பிரித்து இழப்பீடாக வழங்க வேண்டும். வீடியோ ஒளிப்பதிவாளர் தர்மராஜ், கவனமுடன் வீடியோ பதிவு செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுகிறது. தற்காலிக பந்தல் அமைக்க அனுமதித்த மண்டப மேலாளர் சடகோபனின் தண்டனை 6 மாதமாக குறைக்கப்படுகிறது. எலக்ட்ரீசியன் முருகேசன், தற்காலிக மின் இணைப்பு வழங்கும்போது, உரிய பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை. இதுவே போகஸ் லைட்டில் இருந்து அதிகப்படியான வெப்பம் வெளியாகி, தீ விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. எனவே, அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 6 மாத கடுங்காவல் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Tags : persons ,fire ,Srirangam , Srirangam fire, 64 killed, case, highcourt branch, injunction
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்