×

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு எவ்வளவு?: முதல்வரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை தாக்கல்

சென்னை: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நேற்று முதல்வர் எடப்பாடியிடம் வழங்கினார். நாடு முழுவதும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால், அவர்கள் தற்கொலை செய்வது உள்ளிட்ட சில விபரீத சம்பவங்களும் நடந்துள்ளன. இது தமிழகம் முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் 21ம் தேதி தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு பலமுறை கூடி, ஆராய்ந்து இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை தயார் செய்துள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் பயின்று, நீட் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பிரத்யேக உள்ஒதுக்கீடு வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து, குழுவின் அறிக்கையை நேற்று சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து சிறப்பு சட்டத்தை தமிழக அரசு ஒரு சில வாரங்களில் அல்லது நீட் தேர்வு முடிந்த பிறகு பிறப்பிக்க உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் 15 முதல் 20 சதவீதம் வரை தமிழக அரசு உள்இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று அந்த அறிக்கையில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Tags : Government School ,Judiciary Committee ,Chief Minister , Government School, Students, Chief Minister, Judiciary Committee, Report
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா