சென்னை: சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமானது தொடர்பான வழக்கில் டிஜிபி அறிக்கை அளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது.சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 41 வழக்குகளின் புலன் விசாரணை விவர ஆவணங்களை காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டு விட்டன. இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
எனவே, இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழக டிஜிபிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் டிஜிபி பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, கொரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் பதில் தர அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கை நீதிபதி 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.