×

சென்னையிலிருந்து பறக்கலாமுன்னா... விமான டிக்கெட் கட்டணம் எகிறியது: 14 நாள் தனிமை, கையில் முத்திரையால் வரும் பயணிகள் பீதி

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 24 விமானங்களில் செல்ல சுமார் 3,100 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் 24 விமானங்களில் சுமார் 1,100 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 48 உள்நாட்டு விமானங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இன்றுதான் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனாலும்,  வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக உள்ளது. சென்னை வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைய காரணம், பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல இ-பாஸ் கட்டாயம். அடுத்து, 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கைகளில் முத்திரை குத்துவது ஆகியவை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, விமான நிறுவனங்கள் பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் அதிகமாக  வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். சென்னை- கொல்கத்தா குறைந்த கட்டணமாக ரூ.6,500 இணையத்தில் காட்டுகிறது. பயணி புக் பண்ணும் போது, அந்த டிக்கெட் இல்லை. அடுத்த கட்டணமாக ரூ.15,500 டிக்கெட் பதிவு செய்யும்படி இணையத்தில் வருகிறது. அந்த டிக்கெட்டும் ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. தொடர்ந்து,  ரூ.29,500 டிக்கெட் தான் உள்ளது என்று கூறி, அதிக கட்டண டிக்கெட் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இதேபோல், டெல்லி, அந்தமான், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களுக்கான விமான டிக்கெட்டுகளும் வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குகின்றனர். ஆனால், புறப்பாடு பயணிகளை ெபாறுத்தமட்டிலும், சென்னையின் கொரோனா தாக்குதலுக்கு பயந்து எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்து டிக்கெட் எடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர். எனவேதான் சென்னையிலிருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் அதிகமாகவும், சென்னைக்கு வருகிற விமானங்களில் பயணிகள் குறைவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.


6,756 விமானப் பயணிகளில் ஒருவருக்குகூட தொற்று இல்லை
கடந்த ஒரு வாரத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த 6,756 பயணிகளில் ஒருவருக்குகூட கொரோனா தொற்று அறிகுறி இல்லை. சென்னை விமான நிலையத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து 120 உள்நாட்டு விமானங்கள் வந்துள்ளன. அதில், 6,756 பயணிகள் வந்தனர். இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையில் ஒருவருக்குக் கூட கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லை. அதேநேரத்தில், கோவைக்கு 30 விமானங்களில் 3,185 பயணிகள் வந்ததில் 10 பேருக்கும், மதுரைக்கு 20 விமானங்களில்  வந்த 1,365 பயணிகளில் 8 பேருக்கும், திருச்சிக்கு 10 விமானங்களில் வந்த 566 பயணிகளில் 3 பேர் என மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,passenger panic , Fly from Chennai, Flight Ticket Fares, 14-Day Solitude
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...