×

குன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகளில் குறையும் நீர்மட்டம்: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, குன்னூர் வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் வைகை ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைகிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதமாக போதிய மழை இல்லாததால், தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து, உறைகிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வைகை ஆறு வறண்டு கிடக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 125 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரையும் கரையோர விவசாயிகள் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி சட்டவிரோதமாக விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த நீர்வரத்து காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor Vaigai River ,villages , Water level, Coonoor Vaigai River, drinking water shortage, villages
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...