×

சோலார் பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: 70 சதவீத தொகை அரசு மானியம்

சிவகங்கை:  சோலார் பம்புசெட்டுகள் மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சூரியசக்தியில் இயங்கும் சோலார் பம்புசெட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு 2020-2021ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்திற்கு 640 சோலார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 எச்பி முதல் 10 எச்பி வரை சோலார் பம்புசெட்டுகள் அமைத்து தரப்படும். 5 எச்பி சோலார் பம்ப்செட்டுகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 330ம், 7.5 எச்பி சோலார் பம்புசெட் அமைக்க அதிகபட்சமாக தொகை ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 525 மற்றும் 10 எச்பி சோலார் பம்புசெட் அமைக்க அதிகபட்சமாக தொகை ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 629 செலவாகும்.

இதில் 70 சதவீத தொகை அரசு மானியமாக வழங்கப்படும். ஏற்கனவே இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்பொழுது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்காத விவசாயிகள் புதிதாக பதிய வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள இளையான்குடி, காளையார்கோயில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கையிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் காரைக்குடியிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Farmers,set up solar pump sets,70 percent,state subsidy
× RELATED பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை