சென்னை: ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் ‘நான் இந்து மதத்தை பின் பற்றுபவர்’ என்று உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், அறங்காவலர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இதில், அறங்காவலர் மட்டும் தங்களது பொறுப்பை ஏற்க ேவண்டுமென்றால் இந்து என்கிற உறுதி மொழி படிவத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில், ‘கோயில்களில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அறநிலை கொடை சட்டம் 1959ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட உறுதி மொழி ஏற்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அனைத்து கோயில் அலுவலர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்து அறநிலையத்துறை சட்டம் 1959ன் கீழ் நியமனம் செய்யப்படும் அனைத்து நபர்களும் பிறப்பால் இந்து மதத்தை சார்ந்தவர் என்றும் இந்து மதத்தை பின்பற்றுபவர் என்றும் உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உறுதிமொழியை ஜூன் 15ம் தேதிக்குள் எடுத்து விவரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.