×

திருமலையில் இருந்து முதல் கட்டமாக 7 மாவட்டங்களுக்கு 2 லாரியில் லட்டு பிரசாதம் அனுப்பி வைப்பு: நாளை முதல் விற்பனை

திருமலை: திருமலையில் இருந்து முதல்கட்டமாக 7 மாவட்டங்களுக்கு 2 லாரிகளில் லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை முதல் விற்பனை தொடங்குகிறது. கொரோனாவின் இக்கட்டான காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் உள்ள பக்தர்களுக்கு சுவாமியின் லட்டு பிரசாதம் கிடைக்க  செய்யுங்கள் என ஏராளமான பக்தர்கள்  தேவஸ்தானத்திற்கு இ-மெயில், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சலுகை விலையில் அதாவது ₹25க்கு ஒரு லட்டு என்ற அடிப்படையில் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தகவல் மையங்களிலும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.

மொத்தமாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தை அணுகி  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருமலையில் இருந்து இரண்டு லாரிகளில் முதல் கட்டமாக நேற்று காகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு  லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:
7 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு இரண்டு லாரிகளில் லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லாப நஷ்டத்தை கருத்தில் கொள்ளாமல் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தலா 25 விலையில் லட்டு விற்பனை செய்யப்படும். வரும் 25ம் தேதி (நாளை) முதல் ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதம் கிடைக்கும். நாளை (இன்று) மற்ற மாவட்டங்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

தமிழக பக்தர்கள் தந்த சொத்துக்கள் ஏலத்தில் விற்க கடும் எதிர்ப்பு
திருப்பதியில் ஜன சேனா கட்சியின் மண்டல தலைவர் கிரண் ராயல் அளித்த பேட்டியில், ‘‘ஆந்திராவில் அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்து உள்ளார். தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதே பாணியில் தமிழக பக்தர்கள் காணிக்கையாக அளித்த அம்மாநில சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்ததாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு தேவஸ்தான வெப்சைட் முகவரி https:/ttdsevaonline.com ஆக இருந்தது. ஆனால் நேற்று முதல் அந்த வெப்சைட் முகவரியை https:/tirupatibalaji.ap.gov.in என்று மாற்றி அமைத்துள்ளனர். இதனால் ஆந்திர மாநில அரசுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை இணைக்க திட்டமிட்டு இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Tirumala ,Districts ,phase , Tirumalai, 7 Districts, 2 Lorries, Latu Offerings
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி