×

ஊரடங்கால் திருமணத்தை ஒத்திவைக்க விரும்பவில்லை கண்ணாளனை கரம் பிடிக்க 80 கிமீ நடந்த கண்ணாத்தா: உ.பி.யில் நடந்த சுவாரசியம்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தனக்கு நிச்சயித்த மாப்பிள்ளையை கரம்பிடிக்க 80 கிமீ தூரம் நடந்தே சென்று தாலி கட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உபி.யின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமண் திலக் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கோல்டே. இவருக்கு, தல்கிராம் அருகேயுள்ள பைசாபூர் கிராமத்தை சேர்ந்த வீறு என்ற வீரேந்திர குமார் ரதோர் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.  கடந்த 4ம் தேதி பெண்ணின் கிராமத்தில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததால் மாப்பிள்ளையால் திருமணம் நடக்க இருந்த நாளில் அங்கு செல்ல முடியவில்லை.

இதனால், பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் போனில் பேசி வேறு தேதிக்கு திருமணத்தை தள்ளி வைத்தனர். அதன் பிறகும், ஊரடங்கு நீட்டிப்பால் திருமணத்தை தள்ளிவைக்க இருவீட்டினரும் பரிசீலித்தனர். ஆனால், திருமணத்தை தள்ளிவைப்பதை விரும்பாத மணப்பெண் தானே மாப்பிள்ளை ஊருக்கு செல்வது என்று முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த புதன்கிழமை காலையில் தனது வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். 80 கிமீ தூரத்துக்கு நடந்தே சென்று அவர், அன்று மாலையில் மாப்பிள்ளையின் ஊரான கன்னோஜை அடைந்தார். அவரை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். ஊருக்கு திரும்பி போகும்படி அவரை கேட்டுக் கொண்டனர். ஆனால், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று கோல்டே வலியுறுத்தினார்.

வேறுவழியின்றி,  மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் வந்திருப்பது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கல்யாண புடவை, மாங்கல்யம் உள்ளிட்டவை வாங்கி வரப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மந்திரங்கள் முழுங்க மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டினார். நிச்சயித்த மாப்பிள்ளையை கரம்பிடிக்க அந்த பெண் 80 கிமீ நடந்தே வந்து திருமணம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : town ,Kannadam ,UP , Curfew, marriage, Uttar Pradesh, engagement
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி