×

6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு: மத்திய அரசின் கண்துடைப்பு அறிவிப்பு: வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் பேட்டி

சென்னை: மத்திய அரசின் 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு என்பது சலுகை அல்ல, அது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்று வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர்  வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.   கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். சுயதொழில் செய்பவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர். எனவே, அவர்கள் தங்களது மாதக்கடன் தவணையைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.   வீடு, வாகனங்கள் உள்ளிட்டவைகள் வாங்க வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தவணைகள் எப்படி கட்டப் போகிறோம் என விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதற்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு முதல் கட்டமாக 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.  ஆனால் பல  வங்கிகள் இதற்கு எதிராக வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டது.  இதேபோல், கடன் தவணையை தள்ளிவைக்கும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு   வட்டிக்கு வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் தவணையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதிலே அதிக ஆர்வம் காட்டியது. இதனால் பலரும் பெரும் சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவணைகளை ஒத்திப்போட்டால் 6 மாதத்துக்கு சேர்த்து பிற்காலத்தில் லட்சக்கணக்கில் கூடுதலாக வட்டி செலுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. இது பெரிய சுமையை மக்களுக்கு ஏற்படுத்தி விடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:  தவணை ஒத்திவைப்பு என்பது வட்டிக்கு வட்டி கட்ட வேண்டும் என்பதே. இதை ஒரு சலுகை என்று சொல்ல முடியாது. கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதம் தவணையை தள்ளிப்போடுகிறார்கள் அவ்வளவு தான். இந்த 6 மாதத்துக்கான தவணையை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை வரும். இந்த 6 மாதங்களுக்கும் வட்டி கட்ட வேண்டாம் என்று சொன்னால் அது சலுகை. பலர் பயன் பெறுவார்கள். ஆனால், தவணையை தள்ளிப் போட்டால் அதனால் யாருக்கும் பலன் கிடையாது.

 வங்கிகளில் கடன் வாங்கியவர்களில் பலருக்கு இப்போது வேலை போய்விட்டது.  சம்பளம்  கிடையாது. 6 மாதம் கழித்து கட்டுங்கள் என்கிறார்கள். அப்போது மட்டும் என்ன இரட்டிப்பு சம்பளமா வரப்போகிறது. இந்த சம்பளம் தான் வரப்போகிறது. அவர்களுக்கு நிவாரணம் என்ன? இது நிவாரணம் கிடையாது. வட்டி கட்ட வேண்டாம் என்று சொன்னால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நஷ்டம் வரும். அதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வங்கிகளுக்கான வட்டியை நாங்கள் செலுத்தி விடுகிறோம் என்று அரசு அறிவித்தால் அது தான் நிவாரணம். கொரோனா நிவாரண நடவடிக்கை என்பது இது இல்லை. வேலை போனவர்களுக்கு கடன் கட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்கு தள்ளுபடி கொடுக்க வேண்டும். அப்புறம் கட்டுங்கள் என்று கூறுவது சலுகை அல்ல. இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு மட்டுமே.  இவ்வாறு அவர் கூறினார்.Tags : Central Government Mutual Announcement: Bank Employees Federation ,General Secretary , Central government. Bank Employees Federation General Secretary, Corona, Curfew
× RELATED மாஜிஸ்திரேட் மிரட்டல் வழக்கு...