×

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு பல கோடி பட்டு சேலைகள் தேக்கம்

உலகின் பல்வேறு இடங்களில் பட்டுதுணிகளை நெசவு செய்தாலும் நெற்களஞ்சியமான தஞ்சையில் திருபுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டிற்கு என்று தனிச்சிறப்பு உண்டு என்பதில் ஐயமில்லை. தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் விலை உயர்ந்த துணிகளை வாங்கினாலும் திருபுவனத்தில் தயாரிக்கப்படும் பட்டு துணிகளை வாங்கினால் தான் அவர்களுக்கு நிம்மதி. திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் குடும்பத்துடன் திருபுவனத்திற்கு வந்து பட்டு துணிகடைகளை பார்வையிட்டு தரமான அழகிய டிசைனில் நெய்யப்பட்ட சேலைகள், வேட்டி, துண்டுகள், சட்டைகள் வாங்கி கொண்டு செல்வார்கள். இது போன்ற வழக்கம் காலம் காலம் தொட்டு இன்றளவும் நடைபெறுவது சிறப்பாகும். தஞ்சை மாவட்டத்தில் 18 கூட்டுறவு பட்டு சங்கமும், 300 தனியார் பட்டுகடைகள், நெசவாளர்கள் என 1லட்சம் பேர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள நடுத்தர குடும்பம் முதல் வசதி படைத்தவர்கள் வரை திருபுவனம் பட்டு துணிகளை வாங்கி செல்வதை ஐதீகமாகவும், ராசியாகவும் இன்றளவு கருதுகின்றனர். இதனால் விசேஷ நாட்களில் கும்பகோணம், திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு பட்டுப்புடவை நெசவு செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை ஆகும். ஒரு மாதத்திற்கு 2 பட்டு சேலைகள் தயார் செய்யப்படுகிறது. நெசவுத்தொழில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்து வருவது சிறப்பாகும். கொரோனா ஊரடங்கு தடையால் கடந்த 55 நாட்களாக வேலையில்லாமல், வெளியில் செல்ல முடியாமலும் வீட்டிற்குள்ளே நெசவாளர்கள் முடங்கி கிடக்கின்றார்கள். நெய்த சேலைகளுக்கு மூலப்பொருட்கள் கிடைக்காததால் தறி அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் நெசவு நுாலின் தரம் குறையவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற அபாய நிலையால் கும்பகோணம், திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள நெசவாளர்கள் வாழ்வாதாரமின்றி உணவிற்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டு நெசவுத்தொழிலில் தினந்தோறும் ரூ.2 கோடி வரை விற்பனை செய்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தடையால் பல கோடி ரூபாய் பட்டு துணிகள் விற்பனை செய்ய முடியாமல் கடைகள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் மொத்த பட்டு துணி கடைகளில் தேங்கி கிடக்கின்றது.பட்டுநெசவுத்தொழில் செய்யும் நெசவாளர்கள் போதுமான வருமான மில்லாததால் வட்டிக்கு வாங்கி குடும்ப செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் அன்றாடம் வழங்கும் உணவை வாங்கி சாப்பிட்டு பொழுதை கழிக்கின்றனர். பட்டு நெசவாளர்களின் குடும்பத்தை காப்பாற்றவும், அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற அனைத்து வங்கிகளிலும் நிபந்தனையில்லாமல் வட்டியில்லாத கடன், நெசவுத்தொழில் செய்வதற்கான மூலப்பொருள் மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நெசவாளர் மணிமூர்த்தி கூறுகையில், கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்திற்கு சேலைகளை நெசவு செய்து வந்தனர். ஆனால் அந்த சேலைகளை கூட்டுறவு மற்றும் தனியாரிடம் விற்பனை செய்ய சென்ற போது கொள்முதல் செய்ய மறுத்து விட்டனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு கொள்முதல் செய்யப்பட்டது.கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூடியதால் நெசவாளர்கள் நெசவு செய்வதை விட்டுவிட்டனர். அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணங்கள் குறைந்த நபர்களை கொண்டும், முன்பதிவு செய்த திருமண விழாக்களுக்கு மட்டும் அனுமதியளித்ததால் கடந்த 55 நாட்களில் 100 திருமணங்கள் தள்ளி போனது. இதனால் பட்டுதுணிகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது.

நெசவாளர்களின் குடும்பம் மிகவும் மோசமாகவும், நலிவடைந்து வருவதையறிந்து நெசவாளர்களுக்கு என அஞ்சலகத்தில் அரசு வழங்கிய ரூ.1500 இருப்பு வைத்துள்ள சேமிப்பு பணத்தை திரும்ப பெற கேட்டதால் அதனை கொடுத்தனர். இதனை தொடர்ந்து தனியார் கடை உரிமையாளர்கள், நிவாரண பொருட்களை வழங்கினாலும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு சங்கங்கள் சொற்ப பணத்தை மட்டும் வழங்கியது.போதுமான வருமானமில்லாமலும், குடும்ப கஷ்டத்தால் ஏராளமானோர் உணவு விடுதிக்கும், திருமண மண்டபங்களில் சர்வராகவும் மாறியது கொடுமையான விஷயமாகும். பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் குடும்பத்தினர்களுக்கு ரூ.15லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இது நாள் வரை ஒரு பைசா கூட வரவில்லை என விரக்தியில் உள்ளனர்.கும்பகோணம் கோட்டத்திலுள்ள 300 கடைகள், 18 பட்டு கூட்டுறவு சங்கங்களில் தினந்தோறும் ரூ.2 கோடி விற்பனை நடைபெறும். கடந்த 55 நாட்களில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தறி நெய்யும் நெசவாளர்கள் வீடுகளிலும், மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் பல கோடி பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதிலுள்ள சில பொருட்களை உரிய நாட்களில் பயன்படுத்தாததால் அனைத்தும் வீணாகி அதிலும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.நெசவாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், குடும்பத்திலுள்ளவர்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.தவறும் பட்சத்தில் அனைத்து நெசவாளர்களும் பசிபட்டினியால் இறக்கும் நிலை உருவாகும் என்றார். பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் குடும்பத்தினர்களுக்கு ரூ.15லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இது நாள் வரை ஒரு பைசா கூட வரவில்லை.

* கும்பகோணத்தில் நெசவாளர்கள் வாழ்வாதாரம்  கேள்விக்குறி
* உணவிற்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் அவலம்
* தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் தறியில் பட்டுசேலைகள் நெசவு செய்யும் தொழிலாளி.

Tags : Corona , Impact ,Corona curfew,stagnation
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...