×

தீயணைப்பு துறையில் மெகா ஊழல் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் தகவல்கள்: புகுந்துவிளையாடும் கோடிகள்

* சாட்சியை மிரட்டிகலைக்க முயற்சி
* சாட்டையை கையில் எடுப்பாரா இயக்குனர்?

சென்னை: தீயணைப்பு துறையில் வெளியாகும் மெகா ஊழல் குறித்து அடுத்தடுத்து பகீர்தகவல்கள் வெளியாகி வருவது, அத்துறையின் உயரதிகாரிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக சைலேந்திர பாபு, பதவி ஏற்றபிறகு, உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், ஊழலை தடுக்க முடியும். மேலும், தடையின்மைச் சான்று மற்றும் தீ உரிமம் வழங்குவதிலும் நடைபெற்று வரும் விதிமீறல்களை தடுத்து நிறுத்தி உயிர் பாதுகாப்பை உறுதி செய்யப் போவதாக சூளுரைத்தார். ஆனால் தீயணைப்புத்துறையில் நடப்பதோ வேறு விதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலத்தில் எங்கும் இல்லாத வகையில் சென்னையில் உள்ள பல உயர் மாடிக் கட்டிடங்களுக்கு எவ்வித விதிமீறல் களையும் கருத்தில் கொள்ளாமல் கீழ்மட்ட அதிகாரிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளனர். பின்னர் இயக்குனரை ஏமாற்றி தீ உரிமக் கோப்புகளில் கையெழுத்து வாங்கி அதன்மூலம் பல லட்சங்களை அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சமாக பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவ்வாறு லஞ்சத்தில் கொழிக்கும் அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பினாமி பெயர்களில் பல கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக கூறப்படுகிறது.

அதில் முதன்மையானவராக இருப்பது சென்னையில் உள்ள அதிகாரிதானாம். நிலைய அலுவலர் முதல் மாவட்ட அலுவலர் வரை பதவி உயர்வு பெற்று பணிக்காலம் முழுவதும் தொடர்ச்சியாக சென்னையில் மட்டுமே பணிபுரிந்து வருகிறாராம். இவர், மற்ற மாவட்ட அலுவலர்களுக்கும் தலைமையாக செயல்பட்டு துறையின் உயரதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் மாதா மாதம் கவனித்துக் கொண்டு தற்போது தீயணைப்பு துறையின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறாராம்.

சென்னையில் தற்போது முக்கியமான தீயணைப்பு மாவட்டத்தில் பணியாற்றி வரும் அவர், தனது செல்வாக்கை பயன்படுத்தி இவர் தீயணைப்புத்துறை இயக்குனர்களால் மட்டுமே வழங்கப்படும் உயர் மாடி கட்டிடங்களில் (high rise) போதிய உயிர் பாதுகாப்பு மற்றும் உரிய வரைபட அங்கீகாரமின்றி தீ உரிமம் மறுக்கப்படும் கட்டிடங்களுக்கும் இந்த அதிகாரி, தீயணைப்புத்துறை இயக்குனர்களின் கண்களில் மண்ணைத் தூவி மிக ரகசியமாக பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு முறைகேடாக அதிகார வரம்பை மீறி தீ உரிமம் வழங்கியிருப்பது தற்போது ஆதார பூர்வமாக வெளியாகியுள்ளது. ஆனால் சென்னையில் இதுநாள் வரையிலும் தீயணைப்புத்துறை இயக்குனர்களால் நிராகரிக்கப்படும் உயர் மாடி கட்டிடங்களுக்கு, அதன் உரிமையாளர்கள் போலி வரைபடம் தயாரித்து பல லட்சங்களை கொடுத்து தீ உரிமங்களை வாங்கினர்.

அந்த வரிசையில் கூட சென்னை தி.நகரில் உள்ள எஸ்பிஎன் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் 6 மாடி கட்டிடமாக உள்ளது. இதனால், இயக்குனர் மட்டுமே உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்டவர். ஆனால், மாவட்ட அலுவலராக பணியாற்றுகிறவர், அதிகார துஷ்பிரயோகத்தில் அதன் தளங்களை தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் என்று ஆவணங்களை போலியாக உருவாக்கி, வரைபடமும் அதற்கு ஏற்றார்போல தயாரித்து, தீ உரிமமும் வழங்கியுள்ளார்.
மேலும், தீயணைப்புத்துறை இயக்குநராக வரும் அதிகாரிகள் லஞ்சப் புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகளை மாற்றுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னர், தென் சென்னையில் பணியாற்றிய மாவட்ட அலுவலர் ஒருவர் வடசென்னைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில் கடந்த தீபாவளி சமயத்தில் வடசென்னை உட்பட்ட பட்டாசு கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக வசூலிக்கப்பட்ட மாமூலை பெறும்போது அவரது வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திலேயே கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வசம் ராஜேஷ் கண்ணன் என்ற அதிகாரி சிக்கினார். அப்போது அவரது அலுவலகத்தில் உள்ள உதவியாளரிடம் இருந்து எந்தெந்த தீயணைப்பு நிலையங்களில் இருந்து எவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்துள்ளனர் என்ற தகவல் அடங்கிய குறிப்பும் அத்தோடு அந்தப் பணத்தையும் பேப்பர் ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வளவு வலுவான ஆதாரங்கள் இருந்தும் இவர் மீது இதுநாள் வரை துறை ரீதியான எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் தீயணைப்புத்துறையில் சென்னையில் பணியாற்றுகிறவர்கள் எவ்வளவு அதிகார பலத்துடன் உள்ளனர் என்பது தெரியவரும். பணம் பறிமுதல் செய்யப்பட்டவருக்கு தற்போது பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள லஞ்ச ஊழலில் புரளும் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு பக்கபலமாக இருந்து இயக்குனரின் செயல்பாடுகளை அவ்வப்போது தகவல் கொடுத்து அதற்கு பதிலாக பல லட்சங்களை மாதாமாதம் வசூல் செய்பவர் இயக்குனரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் என்று கூறப்படுகிறது.

இவர்தான் தவறு செய்யும் அதிகாரிகளின் எந்த விவரங்களையும் இயக்குநருக்கு தெரியப்படுத்தாமல் மறைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் அதிகாரிகள் இவரை வலுவாக கவனிப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் அரசு விதிமுறைகளை மீறி இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் என இத்தனை பதவி உயர்வுகளையும் பெற்றும் இன்றுவரை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சென்னையில் பணியாற்றும் பல அதிகாரிகள் முறைகேடுகளில் திளைத்து வருவதாகவும், அவர்கள் பல கோடிகளை சுருட்டி, சென்னையில் சொத்துக்களை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அவர்களது பினாமிகளின் சொத்துப் பட்டியலை சேகரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள்.

தீயணைப்பு விதி என்ன?
அதாவது தீயணைப்பு துறையை பொறுத்தவரை உயர் மாடி கட்டிடங்களுக்கு “தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட உரிமம் விதி” யின்படி 2019 பிப்ரவரிக்கு முன்பு வரை 15  மீட்டருக்கு உட்பட்டும், 2019 பிப்ரவரிக்கு பின்பு தற்போது வரையிலும் 18.30  மீட்டருக்கு உட்பட்டும் இருந்தால்தான் மாவட்ட அலுவலர்கள் நேரடியாக தீ உரிமம் வழங்க முடியும். இதுதான் தமிழ் நாடு முழுமைக்கும் தீயணைப்புத்  துறையில் அமலில் இருக்கும் பொதுவான விதி.

சாட்சிக்கு நெருக்கடி
வடசென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் மீதான வழக்கை, லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் அதிகாரி ஒருவர் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பெண் அதிகாரி, இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சி ஒருவரை கொரோனா ஊரடங்கு காலத்தில் கண்டிப்பாக விசாரணைக்கு வந்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மறைமுகமாக அரசு சாட்சியை கலைக்க இந்த வழக்கில் உள்ள ஒரு அதிகாரி நெருக்கடி கொடுப்பதாகவும், இதன்மூலம் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி
தமிழக அரசாணை எண் 122, 123ல் கல்வித்துறை  விதிகளின்படி பள்ளிக் கூடங்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் நிலைய பொறுப்பு  வகிக்கும் நிலைய அலுவலர்கள் தான் தடையின்மைச் சான்று வழங்க வேண்டும். ஆனால் சென்னையில் மாவட்ட அலுவலர் பொறுப்பிலிருக்கும் அதிகாரி, மற்றும்  இவரோடு இந்த லஞ்ச லாவண்யங்களில் கைகோர்த்துள்ள இதே சென்னையில் பணி புரியும் மற்ற மாவட்ட அலுவலர்களும் நிலைய அலுவலர்களை மிரட்டியும், நிலைய அலுவலர்களுக்கு தெரியாமலும் பல பள்ளிகளுக்கு எவ்வித உயிர் பாதுகாப்பையும்  கருத்தில் கொள்ளாமல் தீயணைப்பு விதிகளை மீறி தடையின்மைச் சான்று முறைகேடாக வழங்கி அதன் மூலமும் பல லட்சங்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Bakeer ,scandal , Fire Department, mega scandal
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும்,...