×

தலைமை செயலகம், எழிலகம் உள்பட தமிழகம் முழுதும் அரசு அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கியது

* சொந்த பணத்தில் பஸ்களில் வேலைக்கு வந்தனர்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கியது. தலைமை செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பயணம் செய்பவர்கள் அரசு அறிவிப்புபடி பஸ்களில் சொந்த பணத்தை கொடுத்து பயணம் செய்து பணிக்கு வந்தனர். சிலர்   இரண்டு சக்கர வாகனங்களில் வேலைக்கு வந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு கடந்த 15ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், 18ம் தேதி (நேற்று) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பணியின்போது முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களை 2 பிரிவாக பிரித்து சுழற்சிமுறையில் பணியாற்ற வைக்க வேண்டும். அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி வாரத்தின் 6 நாட்களும் இனி அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல நேற்று காலை 10 மணி முதல் இயங்க தொடங்கியது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஊரடங்கு காரணமாக கடந்த 54 நாள் விடுமுறையில் தங்களது சொந்த ஊர் சென்றிருந்தனர்.

நேற்று முதல் பணிக்கு வர வேண்டும் என்பதால் சென்னை மற்றும் நகர் பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பஸ், ரயில் ஓடாவிட்டாலும் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் அவசர அவசரமாக சென்னை வந்து, நேற்று முதல் பணிக்கு திரும்பினர். சென்னை தலைமை செயலகம், எழிலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் மின்சார ரயிலில்தான் அலுவலகம் வருவது வழக்கம். தற்போது ரயில் இயக்கப்படாவிட்டாலும், தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அலுவலகம் வந்தனர்.

பெண் ஊழியர்கள் மொத்தமாக வேன் ஏற்பாடு செய்து வேலைக்கு வந்தனர். அரசு ஊழியர்கள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் இயக்கப்பட்டது.
இந்த பேருந்துகள்  காலை 8 மணி முதல் திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஒக்கியம் துரைபாக்கம், கிண்டி, நங்கநல்லூர், கே.கே.நகர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், வடபழனி, அண்ணநகர், திருமங்கலம், ஆவடி, பெரம்பூர், மீஞ்சூர், எம்எம்டிஏ காலனி என சென்னையில் 34 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று அரசு ஊழியர்களை ஏற்றி வந்தது. பஸ்சில் குறைந்த அளவு ஊழியர்களே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாலை 5.45 மணிக்கு வேலை முடிந்ததும் வீடு திரும்ப அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏ.சி. வசதி இல்லை
சென்னை தலைமை செயலகம் மற்றும் எழிலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்களில் உள்ள ஏசி இயக்கப்படவில்லை. மேலும், அலுவலகம் முழுவதும் 4 பக்கமும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளதால் வெளியில் இருந்து எந்த காற்றோட்ட வசதியும் இல்லாமல், மின்விசிறி மட்டுமே பயன்படுத்தி அரசு ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Tags : Tamil Nadu ,government offices ,Ezhalam ,Chief Secretariat , Chief Secretariat, Ezhalam, Tamil Nadu, Government Offices, Staff
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...