×

கொரோனா ஊரடங்கால் லாரி பட்டறை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு: லட்சக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பு

* சங்ககிரியில் 6 ஆயிரம் பட்டறைகளும், திருச்செங்கோட்டில் 4 ஆயிரம் பட்டறைகளும் உள்ளன.
* 10 ஆயிரம் பட்டறைகளிலும் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
* தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. அதில் சேலத்தில் 36 ஆயிரம் லாரிகளும் நாமக்கல்லில் 42 ஆயிரம் லாரி களும் உள்ளன.

திருச்செங்கோடு: தமிழகத்தில் லாரிகள் ஓடாததால் அது சார்ந்த பட்டறை தொழிலாளர்கள் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்வால் பட்டறைகளை  திறந்தும், வருவாய்க்கு வழியின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தை பொறுத்தவரை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிரதானமாக இருப்பது லாரித் தொழில். இதிலும் நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் லாரி கேந்திரம் என்றே அழைக்கப்படுகிறது. இதனால் லாரிகள் சார்ந்த உபதொழில்களும் இந்த மாவட்டங்களில்  ஏராளமாக உள்ளது.

இதில் குறிப்பாக சேலம்  மாவட்டத்தின் சங்ககிரி, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதிகளில் மட்டும் லாரிகள் சார்ந்த கூண்டு கட்டும் பட்டறைகள், மெக்கானிக் பட்டறைகள், லேத் பட்டறைகள், ஆயில் பட்டறைகள், கண்ணாடி பட்டறைகள், கியர் பாக்ஸ் பட்டறைகள், எண்டு ஜாக்கி பழுது பார்க்கும் பட்டறைகள் என ஏராளமாக உள்ளது. இது போன்ற பட்டறை தொழில்களை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக அனைத்து பட்டறைகளும் மூடப்பட்டது. இதனால் 45 நாட்களுக்கும் மேலாக இந்த தொழிலாளர்கள் வருவாய் இழந்து, வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் சிறிய அளவிலான பட்டறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் லாரிகள் ஓடாததால் வருவாய் இழந்து தவிப்பதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த மோட்டார் தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: லாரித் தொழில் என்பது ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்டது. இந்த தொழிலை மேம்போக்காக பார்த்தால் அதில் உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும், டிரைவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது போல் தெரியும். ஆனால் லாரிகளின் ஒவ்வொரு பாகமும் ஒரு தொழில் சார்ந்தது. இதனால் மெக்கானிக்குகள், டர்னர்கள், பிட்டர்கள், ஒயர்மேன்கள், பெயின்டர்கள், ஹெல்பர்கள் என்று ஏராளமான தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருச்செங்கோடு, சங்ககிரியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் லாரியை அடிப்படையாக கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது. அதை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைத்து வருகிறது.

உதாரணமாக ஒரு புதிய லாரியை வாங்குபவர், அதற்கான சேஸ் மட்டுமே  எடுத்து வருவார். அதற்கு கூண்டு கட்டுவது, கண்ணாடிகள் வைப்பது, ஒயரிங் செய்வது, ரேடியேட்டர் சரிபார்ப்பது, கியர்பாக்ஸ் சர்வீஸ் செய்வது, பெயின்ட் அடிப்பது என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு தொழிலாளி தேவை. இது  போன்ற தொழிலாளிகள், சிறிய அளவில் தொழில் செய்வதோடு, உதவியாளர்களாகவும் சிலரை வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இந்த நடைமுறை லாரிக்கு மட்டுமல்ல பஸ், மினிவேன் என்று அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும். இதேபோல் லாரிகள், பஸ்களின் உதிரிபாகங்கள் பழுதாகும் போதும், அதை சரி செய்யும் வேலையும் இவர்களுக்கே கிடைக்கிறது.

இந்த வகையில் செயல்படும் ஒவ்வொரு சிறுதொழில் நிறுவனங்கள் மூலமும் குறைந்த பட்சம் 10 குடும்பங்கள் பிழைக்கிறது. தற்போது ஊரடங்கால் அனைத்து மோட்டார் வாகனப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சேஸ்களும் வரவில்லை. அதே போல் லாரிகள் ஓடாததால் தேய்மானம், பழுது,சீரமைப்பு என்று எதற்கும் வழியில்லாமல்  போய்விட்டது. இதனால் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் இது போன்ற சிறு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும் வருவாய்க்கு வழியில்லாமல் போய்விட்டது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இயல்பு நிலை எப்போது திரும்பும்? என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமே நாட்களை நகர்த்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது பெரும் சோதனை
லாரிகள் ஓடும்போது  அதை நம்பி டயர் விற்பனை, தார்ப்பாய் விற்பனை, ஆயில் விற்பனை, பல்வேறு உதிரிபாகங்கள் விற்பனையும் ஜோராக நடக்கும். இந்த தொழில்களை நம்பியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த தொழிலாளர்கள், சுறுசுறுப்புக்கு டீ அருந்தியும், சிறிய ஓட்டல்களில் உணவருந்தியும் பசியாறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் இது போன்ற பட்டறைகளுக்கு அருகில் டீக்கடைகள், சிறிய ஓட்டல்களை நடத்தி, சிலர் பிழைப்பு நடத்தி வந்தனர்.  தற்போது பட்டறைகள் பொலிவிழந்து கிடப்பதால் இந்த கடைகளும் மூடிக்கிடக்கிறது. பட்டறை தொழில்களின் முடக்கம், அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் சோதனையாக மாறி நிற்கிறது.



Tags : truck workshop workers ,Corona Curfew Truck Workshop Corona , Corona, curfew, lorry workshop workers
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...