×

கொரோனா தொற்று இரண்டாம் அலையால் மீண்டும் நரகமான தொழிலாளர்கள் வாழ்க்கை: ஓட்டல், கட்டுமானத் தொழில்கள் முழுமையாக முடக்கம்; பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம்

சென்னை: கொரோனா 2ம் அலையால் தொழிலாளர்களின் வாழ்க்கை மீண்டும் நரகமாகியுள்ளது. ரயில்கள் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் ஓட்டல், கட்டுமானத் தொழில் போன்றவைகள் முழுமையாக முடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை. இதனால், இரவு நேரம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. இரவு நேர ஊரடங்கிற்கு பிறகும் கொரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை. மே மாதம் வரையில் எதிர்பார்த்ததை விட தொற்றின் வீரியம் அதிகமாக தான் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், நேற்று தமிழக அரசு விதித்த புதிய கட்டுப்பாட்டில் புதுச்சேரியை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா அதிகமாகி வரும் நிலையில் குஜராத், அசாம், ஒடிசா, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மூட்டை, முடிச்சுகளுடன் மீண்டும் திரும்பி செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் கிடைப்பதே போதும் போதும் என்றாகி விடுகிறது. சென்னை, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் ஓட்டல், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள், சாயப்பட்டறை ஆலைகள், கட்டிட தொழில்கள் போன்றவைகளில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இருந்து ரயில்கள் மூலம் மட்டுமே 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ரயில் நிலையங்களில் நாளுக்கு நாள் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்தவாறே உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஓட்டல், கட்டுமான தொழில், சிறு குறு நிறுவனங்களில் தொழில்கள் முழுமையாக முடங்கிப்போய் உள்ளது. இதேபோல், தமிழகத்தை காட்டிலும் டெல்லி, குஜராத், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் தொற்றும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த அச்சத்தின் காரணமாக சில வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே இங்கே தங்கியுள்ளனர். இவர்களுக்கும் உணவு, தங்கும் இடம் போன்றவை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது வணிக வளாகம், அழகு நிலையங்கள், திரையரங்கு, பார்கள், ஷாப்பிங் மால் போன்றவை இயங்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், இங்கு பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வரும் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்தவாறு உள்ளது. தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறி வருவதன் காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான பொருட்களை தொழில் நிறுவனங்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மீண்டும் ஒரு பொருளாதார சரிவை சந்திக்கும் பாதையில் தமிழகம் சென்றுகொண்டிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், ‘பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்து வருகிறோம். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக முழு ஊரடங்கு போன்ற நிலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல், கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது தாங்கள் வேலை செய்த இடங்களை விட்டு எங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றோம். மீண்டும் தமிழகம் திரும்பும் போது இனிமேல் எந்த பாதிப்பும் ஏற்படாது என நினைத்தோம். ஆனால், கொரோனா தாக்கம் அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருவதால் எங்களின் சொந்த ஊர்களுக்கே செல்கிறோம். கடந்த ஆண்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் எங்களின் ஊர்களுக்கு நடந்தே சென்றோம். எப்போது வேண்டுமானாலும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுவிடலாம் என்ற பயம் எங்களிடம் எழுந்துள்ளது. இனிமேல் எப்போது கொரோனா தக்கம் குறைகிறதோ அப்போது தான் மீண்டும் வருவோம். இதேபோல் எங்களுக்கு வேலையும் சரிவர கிடைப்பதில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.  இவ்வாறு கூறினர்.அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கைசொந்த ஊர்களுக்கு செல்லாமல் தமிழகத்தில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே தங்க இடமும், உணவு தேவையையும் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். தொழில்கள் மீள்வது கடினம்திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள ஆடை நிறுவனங்களில் வேலை செய்து வந்த 80 சதவீத வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணி முழுமையாக முடங்கிபோய் உள்ளது. எனவே, தற்போது இந்த நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களையே முழுமையாக நம்பி உள்ளது. ஏற்கனவே, ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வந்த இந்த தொழில்கள் தற்போது முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று குறைந்தாலும் மீண்டும் தொழில்கள் மீள்வது மிகவும் கடினமாகி உள்ளது.5 லட்சம் தொழிலாளர்கள்தமிழகத்தில் 5 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். தற்போது இவர்களில் கொரோனா அச்சம் காரணமாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்….

The post கொரோனா தொற்று இரண்டாம் அலையால் மீண்டும் நரகமான தொழிலாளர்கள் வாழ்க்கை: ஓட்டல், கட்டுமானத் தொழில்கள் முழுமையாக முடக்கம்; பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Corona pandemic II wave ,Chennai ,Corona 2 wave ,North State ,Corona Infectious ,Second Wave Again Hell Workers ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...