சென்னை: மிகச் சரியான கால்பந்து வீரர் என்றால் அது ரொனால்டோ மட்டும்தான், ஆனால் சிறந்த வீரர் என்றால் மெஸ்ஸியைதான் சொல்வேன்… என்று லிவர்பூல் கால்பந்து கிளப் பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் தெரிவித்தார். கால்பந்து உலகில் யாருக்கு முதலிடம் என்ற போட்டியில் இருக்கும் 2 வீரர்கள் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி (32), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (35) ஆகியோர் தான். தங்களின் சிறப்பான ஆட்டங்களால் இருவரும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கின்றனர். கோல் அடிப்பதிலும் பந்தை கடத்திச் செல்வதிலும் இவர்கள் காட்டும் தனித்திறமையால், இருவரையும் கால்பந்து கிளப்கள் ஆண்டுக்கு பல நூறு கோடிகள் கொடுத்து வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
ரொனால்டோவின் ஆட்டம் நாளுக்கு நாள் வேகம் பெற அவருக்கான விலையும் கால்பந்து சந்தையில் உயர்ந்து கொண்டே போகிறது. அவர் உலகின் முன்னணி கிளப்களான மான்செஸ்டர் யுனைடட், ரியல் மாட்ரிட் கிளப்களுக்காக விளையாடிவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜூவென்டஸ் கிளப்புக்காக விளையாடி வருகிறார். மெஸ்ஸி கடந்த 2004 முதல் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அடிக்கடி இவர் வேறு கிளப்புக்கு போகப்போகிறார் என்று பேச்சு எழுந்தாலும், பார்சிலோனா கூடுதல் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக்கொள்கிறது.
இருவரில் யார் தலை சிறந்த வீரர் என்ற கேள்வி, கால்பந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே நிரந்தர விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவாதத்தை சாம்பியன்ஸ் லீக் தொடரின் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் இப்போது மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். சமூக ஊடகமொன்றில் பதிவேற்றிய வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் சிறந்த கால்பந்து வீரருக்கான வரையறைகளை உருவாக்கினால் அத்தனைக்கும் சரியான பதில்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பார். களத்தில் அவர் காட்டும் வேகம், ஓட்டம், பந்தை கடத்தும் விதம், ஆட்டத்தில் அவரின் அணுகுமுறை எல்லாம் அவர் சரியான வீரர் என்பதை உங்களுக்கு உணர்த்தும். ரொனால்டோவை விட மிகச்சரியான தொழில்முறை ஆட்டக்காரர் இருக்க முடியாது.
ஆனால் களத்தில் என்னை ஈர்ப்பவர் என்றால் அது மெஸ்ஸிதான். எளிமையான அவர், களத்தில் எல்லாவற்றையும் எளிதாக்கி விடுகிறார். அவரின் உடல் தேவைகள் குறைவு . ஒரு வீரராக ஆடுகளத்தில் ரொனால்டாவை விட மெஸ்ஸியை கொஞ்சம் அதிகமாக விரும்புகிறேன். ரொனால்டோ மிகச்சரியான வீரர், ஆனால் மெஸ்ஸி சிறந்த வீரர். அதற்காக ரொனால்டாவை பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறு க்ளாப் கூறியுள்ளார். கால்பந்து களத்தில் இந்த இருவரும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளனர். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பலோன் டி’ஆர் விருதை மெஸ்ஸி 6 முறையும், ரொனால்டோ 5 முறையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
