×

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டி நெறிமுறை வெளியீடு: கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகளை இயக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டன.

இந்த நிலையில் ஊரடங்குக்கு பிறகு தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
* தொழிற்சாலைகள் திறக்கப்படும் முதல் வாரத்தை பரிசோதனை வாரமாக கடைபிடிக்க வேண்டும்.  முதல் வாரம் உற்பத்தி செய்யக் கூடாது. அனைத்து உபகரணங்களும், கருவிகளும், கொள்கலன்களிலும் உடைப்பு, கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.  உடனடியாக அதிகப்படியான உற்பத்தியை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க கூடாது. பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஒட்டுமொத்த யூனிட்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என்று உறுதி செய்ய வேண்டும். உற்பத்தி யூனிட்களில் கசிவுகள் ஏதும் ஏற்படாத வகையில் இறுக்கமான வகையில் மூடப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
* தொழிற்சாலைக்கு உள்ளே நுழையும் போது ஊழியர்கள் சானிடைசர்கள் பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். உடல் வெப்பநிலையை தினசரி 2 முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பணியின் போது முகக் கவசங்கள், கைக் கவசங்கள் அணிய வேண்டும்.
* தொழிலாளர்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை உபகரணங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறான சத்தமோ, வாசனையோ வெளிவந்தால் உடனே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலைமை விபரீதமாக இருந்தால் உடனே தொழிற்சாலையை மூட வேண்டும்.
* ஊரடங்கு நாட்களில் தினசரி சேமிப்பு கிடங்குகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்திருக்க வேண்டும். அபாயகரமான வேதிப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட வேதிப்பொருட்களின் நிலைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* பைப்கள், உபகரணங்களை காற்று/ தண்ணீர்/ வேதிப் பொருட்கள் கொண்டு வழக்கமான முறைகளின் படி சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து பைப்கள், கொள்கலன்களில் அழுத்தம் மற்றும் வெப்பநிலை சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* உற்பத்தி செய்யப்படும் மற்றும் சேமித்து வைக்கப்படும் பொருட்கள் அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். ஷிப்ட் முறையில் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* ஆபத்தான உபகரணங்களை கையாளும் ஊழியர்கள் மிகவும் அனுபவமிக்கவர்களாக, திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது. 24 மணி நேரமும் பணியாற்றும் தொழிற்சாலைகள் ஒவ்வொரு ஷிப்டுகளுக்கு இடையில் ஒருமணி நேர இடைவெளி விட வேண்டும்.
* வெளியூரில் இருந்து பணியாற்றும் நகரங்களுக்கு திரும்பும் ஊழியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்படும் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
* தொழிற்சாலைகளில், சமூக விலகல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் கூட்டமாக கூடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு 2 அல்லது 3 மணி நேரத்திற்கும் ஊழியர்கள் தங்கள் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் சானிடைசர்கள் அளிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஓய்வறைகள், நாற்காலிகள், மேஜைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். இதனை அனைத்து உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Operation of Factories ,Tamil Nadu Government Directive for Collectors ,Operating Factories ,Tamil Nadu Govt , Corona, Curfew, Factories, Collectors, Government of Tamil Nadu
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...