×

ஆன்லைனில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : மனுதாரருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிப்பு!!!

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை. மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது, மேலும் விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் பதுக்கப்பட்டு மிக அதிக விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ மாணவியர்கள் கூட மது அருந்துவதை  காண முடிகிறது. இதனை தவிர்க்க டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட வேண்டும். அத்துடன் கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் .அத்துடன் மது விற்பனை செய்ய ஒரு மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும், மதுபானக் கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும், என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

மனுதாரருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிப்பு

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ்நாரயண், மனுதாரர் அதிமுகவைச்சேர்ந்தவர் என்றும் அதை மறைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட மனுதாரர் கேட்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாராருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.



Tags : Online, Tasks, Liquor Sale, Petition, Discount, Petitioner, Rs. 20 Thousand, fine, imposition
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...