×

2 பேருக்கு கொரோனா வந்ததால் அதிரடி: வெள்ளை மாளிகை ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: டிரம்ப் மட்டும் தில்லு

வாஷிங்டன்:  அமெரிக்காவில் அதிபர், துணை அதிபரின் உதவியாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பின் ராணுவ உதவியாளர் மற்றும் துணை அதிபரின் ஊடக செய்தி தொடர்பாளர் ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அதிபர், துணை அதிபருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் வெள்ளை மாளிகை பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, வெள்ளை மாளிகையில் அதிபர் நிர்வாகப் பிரிவில் அன்றாட பணிகளுக்காக மேற்கு பிரிவு அலுவலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.  அதிபருடன் பணிபுரியும் அனைவருக்கும் முன்னதாக கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பது தற்போது தான் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் தான் முகக் கவசம் அணிந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். திங்கள் முதல் அதிபரின் மூத்த ஆலோசகரும், மருமகனுமான குஷ்னர் உட்பட அனைவரும் முகக் கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்.

₹465 கோடி தேர்தல் நிதி திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்காக இரு போட்டியாளர்களும் நிதி திரட்டி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இரு போட்டியாளர்களும் பொதுக்கூட்டம் நடத்தாமல் நிதி திரட்டி வருகின்றனர். கடந்த ஏப்ரலில் டிரம்ப் சார்பில் குடியரசு தேசிய கமிட்டி ரூ.465 கோடி  நிதி திரட்டி உள்ளது. இதேபோல், ஜோ பிடனுக்கும் கடந்த மாதம் ரூ.456 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

Tags : Corona Comes ,White House ,Dillu. , Corona, White House staff, face mask, Trump
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி