×

கொரோனா பரவல் தடுப்பில் தீவிர களப்பணியாற்றி வைரஸ் பாதித்த நர்சை ஒதுக்கிய அக்கம்பக்கத்தினர்: உறவினர்களும் புறக்கணித்தனர்

*  நெஞ்சை பிழியும் சம்பவம்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் 49 வயது நர்ஸ். இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை ஆகியவற்றில் 22 ஆண்டுகள் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் முன் களப்பணியாளராக பணியில் தன்னை ஈடுபடுத்திய இந்த நர்சுக்கும் ஏப்ரல் 27ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தொடங்கிய 10 நாட்களுக்குள் குணமடைந்த நர்ஸ் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். கடைசியாக அவர் பணிக்கு வந்தபோது வீட்டில் வெறும் 500 ரூபாயை மட்டுமே வைத்துவிட்டு வந்தார். அந்த பணத்தில்தான் 2 குழந்தைகளும், உடல்நிலை சரியில்லாத கணவரும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 இந்நிலையில்தான் அவர் சிகிச்சை முடிந்து வீடு வந்தார். அவர் வருவது தெரிந்தவுடன் வீட்டின் அருகில் உள்ளவர்களும், உறவினர்களும் அவரது வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டனர். வீட்டில் செய்தித்தாள் போடும் பையனையும் நிறுத்திவிட்டனர். அவர் வீட்டில் வந்து பார்க்கும்போது வீட்டில் குடிக்க கூட தண்ணீர் இல்லை. அவரது மகனையும் ஓட்டலில் சென்று உணவு வாங்க அந்த அபார்ட்மென்டில் உள்ளவர்கள் அனுமதிக்கவில்லை.
நேற்று முன்தினம் அவர் சாலையில் வந்த தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். ‘‘அந்த பெண்ணை பாருங்கள் சாதாரணமாக தெருவில் நடமாடுகிறார்’’ என்று வெளிப்படையாகவே பேசியுள்ளனர். நர்ஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் தெரிந்த நிலையிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்ககூட அந்த நர்சால் வெளியே வர முடியவில்லை.

கோடம்பாக்கம் பகுதியில் உள்ள இன்ஜினியர், அவரது அலுவலக ஊழியர்களை நர்சுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்களும் எதுவும் செய்யவில்லை.  இதற்கிடையே, அந்த அபார்ட்மென்டில் இருக்கும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நர்சால்தான் கொரோனா பரவியது என்று அபார்ட்மென்டில் உள்ளவர்கள் அவரை திட்டுகிறார்களாம். “தன்னலம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவி செய்தேன். ஆனால், என்ன தவறு செய்தேன் என்று மட்டும் தெரியவில்லை” என்று அந்த நர்ஸ் கண்ணீருடன் தெரிவிக்கிறாராம்.

இதேநிலைதான், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கும் நடந்துவருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இரவு பகல் பாராமல் கொரோனா சிகிச்சை பணியில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு நீங்கள் பாராட்டுதல்களையும், பரிசுகளையும் வழங்க வேண்டாம். குறைந்த பட்சம் அவர்களின் மனதை புண்படுத்தாமல் இருக்கலாமே என்று மருத்துவ பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள் மன வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

Tags : neighbors ,field ,corona spread , Corona, Curfew, Madras, Kodambakkam
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...