×

அரசு பொது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வார்டு முடக்கம்: உள் நோயாளிகளுக்கு அனுமதியில்லை

பெரம்பூர்: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த 2 நாட்களுக்கு முன் கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த 63 வயது முதியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மாலை அழைத்து செல்லபட்ட அவரை, நள்ளிரவு 3 மணி வரை மருத்துவர்கள் உள் நோயாளியாக அனுமதிக்காமல், இதய சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அந்த பிரிவு மூடப்பட்டுள்ளது என்றும், அதனால் மாரடைப்புக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஊசி மற்றும் மாத்திரைகளை மட்டும் கொடுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.  வீட்டிற்கு சென்றதும் மீண்டும் வலி அதிகரிக்க வேறு வழியில்லாமல் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனக் கூறி அவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.  தற்போது அவருக்கு அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், பல சம்பவங்கள் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் அரங்கேறி வருவதாகவும், இதனால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 90 சதவீதத்துக்கு மேல்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை உடனடியாக தனிமை வார்டுகளுக்கு மாற்றிவிட்டு,  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய நோயாளிகள் காத்துக்கிடக்கின்றனர். 2 மாதத்திற்கு முன்பே தேதி கொடுத்த நிலையில் இதுவரை அவர்களை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனவே, அவசர சிகிச்சைக்கு வரும் நோய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Inpatients ,Government General Hospitals , Government General Hospitals, Emergency Ward, Internal Patients
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...