×

ஊரடங்கு வறுமையின் காரணமாக முடிதிருத்தும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தரமணி தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பரணி (35). இவர் தனது வீட்டின் அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடியை நிறுத்த வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில்  தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குள், டீக்கடைகள், சலூன் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, மறுவாழ்வு மையத்தில் இருந்த வந்த பரணி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், வீட்டிலேயே முடங்கி கிடந்ததால், போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். மேலும் கடந்த 43 நாட்களாக வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில் வீட்டு வாடகை மற்றும் கடை வாடகையும் கட்ட முடியாமலும் வறுமையில் இருந்த அவர் கடந்த 2 நாட்களாக   யாரிடமும் எதுவும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் அதிகம் நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர் மனைவி மற்றும் உறவினர்கள் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது யாரும் தெரியாது என்று கூறியுள்ளனர்.   எங்கு தேடியும் கிடைக்காததால் கடைசியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு தூக்கில் பரணி பிaணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த தரமணி போலீசார்  விரைந்து வந்து  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், அவருடைய உறவினர்கள் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சலூன் கடையை திறக்க அனுமதி வழங்காததால் தான் அவர் வறுமையில் இருந்துள்ளார். எனவே சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் அவருடைய குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர்.   


Tags : Barber worker ,suicide ,Relatives ,Barber , Curfew, worker, lifted suicide, relatives demonstrated
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை