×

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று மரணமடைந்தார். முன்னாள் மத்திய அமைச்சர்  தலித் எழில்மலை (74). நேற்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு முனிரத்தினம் என்கிற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர், 1999ம் ஆண்டு நடந்த  மக்களவை தேர்தலில் பாமக சார்பில்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 2001ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் திருச்சி பொது தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தலித் எழில்மலையின் பிறந்த ஊரான மதுராந்தகம் ஒன்றியம், இரும்பேடு கிராமத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திலேயே அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக அவருடைய உடல் எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தலித் எழில்மலை மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அரசியல் குரலாக ஒலித்த தலித் எழில்மலை உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி வேதனையை அளிக்கிறது.

அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். ராமதாஸ் இரங்கல்: பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘பாமக முதல் பொதுச்செயலாளரும், பாமக சார்பில் முதன்முறையாக மத்திய அமைச்சர் பதவி வகித்தவருமான தலித் எழில்மலை காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Tags : Death ,Ezhimalai ,Union Minister , Death ,former Union Minister Dalit Ezhimalai
× RELATED முத்தரையர் 1349வது சதயவிழா: எல்.முருகன் வாழ்த்து