×

பிஇ, பிடெக் சேர்க்கை கவுன்சலிங் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: ஏஐசிடிஇ அறிவிப்பு

சென்னை: பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.  அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் எனப்படும் ஏஐசிடிஇயின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கைக்கான கவுன்சலிங் அந்தந்த மாநிலத்தில் ஜூலை மாதத்தில் நடத்தி, ஆகஸ்ட் மாதம் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர் சேர்க்கையை ஏஐசிடிஇ ஒத்திவைத்தது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தும் தேதியை ஏஐசிடிஇ இப்போது அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்ட கவுன்சலிங்கை ஆகஸ்ட் 15ம் தேதியே அல்லது அதற்கு முன்னதாகவோ நடத்தி முடிக்க வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 25ம் தேதி அல்லது  அதற்கு முன்னதாகவும் நடத்தி முடிக்க வேண்டும்.
மேலும் பொறியியல் கல்லூரிகள்  ஆகஸ்ட் 1ம் தேதியில் இரண்டாம் ஆண்டு  முதல் இறுதி ஆண்டு வகுப்புகளும், செப்டம்பர் 1ம் தேதி புதிய மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்க வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் பணி மே 2வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : AICTE ,Announcement , PE, BTech, Admissions Counseling, AICTE
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...