×

கொரோனாவிலும் சமாளிக்கலாம் காசு இல்லையேன்னு கையை பிசையாதீங்க... எவ்வளவோ வழியிருக்கு கவலையை விடுங்க: வட்டியும் குறைவு; உடனே கிடைக்கும்

சென்னை: ஊரடங்கால ஒரே இடத்தில் அடைச்சு வச்ச மாதிரி, வீட்டுக்குள்ளயே கிடக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு. வேலைக்கும் போக முடியல... அவ்வளவு ஏன்? ஆபீஸ் அட்ரஸ் கூட மறந்து போச்சு. பருப்பு டப்பாவில் மறைச்சு வச்ச பணம், குழந்தைகளின் உண்டியல் சேமிப்புன்னு எல்லாத்துலயும் கை வச்சாச்சு. அக்கம் பக்கத்துலயும் கேட்க முடியாது. இனிஎன்ன பண்றதுன்னே தெரியலங்கற கவலை வீட்டுக்கு வீடு வந்து விட்டது. கவலையை விடுங்க, எவ்வளவு வழி இருக்கு; நீங்களே பாருங்க:
பிக்சட் டெபாசிட் லோன்: பிக்சட் டெபாசிட்களில் (எப்.டி) உள்ள பணத்துக்கு ஏற்ப வங்கிகள் கடன் வழங்குகின்றன. நீங்கள் போட்ட பிக்சட் டெபாசிட்டுக்கு வங்கி எவ்வளவு வட்டி தருகிறதோ அதை விட ஓரிரு சதவீதம்தான் கடன் வட்டி இருக்கும்.

தனிநபர் கடனுக்கு வட்டி 8.75% முதல் 24% வரை கூட வசூலிக்கிறார்கள். ஆனால், எப்.டி கடன் அப்படியல்ல. திருப்பிக்கட்ட வழியே இல்லை என நினைத்தால், எப்.டியை மூடிவிட்டு பணம் எடுத்து விடலாம். ஆன்லைனிலேயே இதை செய்ய முடியும். ஆயுள் காப்பீடு: மணிபேக், எண்டோவ்மென்ட் போன்ற பாலிசிக்களில் முதலீடு செய்திருப்போர், அதன் அடிப்படையிலேயே கடனை வாங்க முடியும். இதற்கு குறைந்தது மூன்று ஆண்டு பிரீமியம் கட்டியிருந்தால் பணம் கிடைக்கும். பாலிசி சரண்டர் மதிப்பில் 90% வரை கடனாக வாங்கலாம். வழக்கமாக இதற்கு ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அதேநேரத்தில், லோன் முடியும் வரை பாலிசி காலாவதி ஆகிவிடக்கூடாது.
 தங்க பத்திரம்: தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், 20,000 முதல் 20 லட்சம் வரை கடன் பெற வழி உள்ளது.

கடனாகவும், ஓவர் டிராப்ட் ஆகவும் பெற்றுக்கொள்ளலாம். பத்திர மதிப்பில் 65 சதவீதத்துக்குள்தான் கடன் தருவார்கள். இத்தகைய கடன்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிததத்துடன் 2 சதவீதம் சேர்த்து சுமார் 9.9 சதவீத வட்டி வசூலிக்கிறது. பத்திரத்தை அடமானமாக வைத்து விட்டால், அவற்றை விற்பனை செய்யமுடியாது. இதுபோல் தங்க நகை, நாணயமாக வாங்கி வைத்திருப்பவர்களும் அதனை வைத்து கடன் பெறலாம். பிஎப்: ஊரடங்கு காலத்தில் பிஎப் பணத்தில் இருந்து 75% எடுத்துக்கொள்ள விதிகளில் தளர்வு செய்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 3 மாத சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது பிஎப் கணக்கில் உள்ள பணத்தில் 75%, இதில் எது குறைவோ அதை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, உங்கள் பிஎப் கணக்கில் 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களது சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து 15,000 என்றால், அதிகபட்சம் ₹45,000 ரூபாய் வருகிறது. அதேநேரத்தில், பிஎப் கணக்கில் 50 ஆயிரம் மட்டுமே இருப்பதால், 37,500தான் குறைந்த பட்ச தொகை. எனவே 37,500 தான் கிடைக்கும்.
வீட்டுக்கடன் டாப் அப்: மேற்கண்ட வழி இல்லாதவர்கள் அல்லது சேமிப்பை கரைக்க விரும்பாதவர்கள், ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் மீது டாப் அப் ஆக கூடுதல் கடன் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்த 3 மாத தவணை சலுகையை பயன்படுத்தியிருந்தால், வங்கிகள் டாப் அப் கடன் தர யோசிக்கலாம்.

இதற்கு வங்கியை அணுகி நீங்கள் விளக்கம் பெற வேண்டும். இதுதவிர, சொத்து அடமானம் அடிப்படையிலும் கடன் வாங்க முடியும். மேற்கண்டவை ஒரு வழிகாட்டிதான். வங்கிகளுக்கு ஏற்ப வட்டி மற்றும் கடன் நடைமுறைகள் மாறுபடும். இருப்பினும் இப்போதைக்கு சமாளிக்க இப்படி நிறைய வழி இருக்கு. எதிர்காலத்தை பார்த்து பயப்படாதீங்க. இதுவும் கடந்து போதும் கவலைப்படாதீங்க…!

கடன் வகை    வட்டி    செயல்பாட்டு கட்டணம்
(கடன் தொகையில் %)    அதிகபட்ச
கடன் தொகை    தவணைக்காலம்
தனிநபர் கடன்    10.5 - 26 சதவீதம்    4 சதவீதம் வரை    40 லட்சம் வரை    7 ஆண்டு வரை
தங்க அடமான கடன்    9.15 சதவீதம் முதல்    2 சதவீதம் வரை    50 லட்சம் வரை    3 ஆண்டு வரை
சொத்து அடமான கடன்    8.95 சதவீதம் முதல்    4 சதவீதம் வரை    10 கோடி வரை    30 ஆண்டு வரை
வீட்டு கடன் டாப் அப்    7.9 - 11.25 சதவீதம்    1 சதவீதம் வரை    சந்தை மதிப்பில் 70 சதவீதம் வரை    30 ஆண்டு வரை



Tags : CORONA CANNOT ,CANN'T ,Picaiyatinka ,koronavilum illaiyennu , Corona, money, curfew
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...