×

கோயம்பேட்டில் காய்கறி வாங்கி வந்து விற்ற மளிகை கடைக்காரருக்கு கொரோனா: சோழிங்கநல்லூரில் பரபரப்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்த வியாபாரிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மார்க்கெட் சீல் வைக்கப்பட்டது.   இந்நிலையில், சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வரும் 26 வயது வாலிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் விசாரணையில், இவர், தினசரி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து, தனது கடையில் வியாபாரம் செய்தது தெரியவந்தது. இவரது கடையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து பனையூர் பகுதிக்கு காய்கறி ஏற்றி வரும் வேன் டிரைவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெரம்பூர்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பி சிஐடி தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 31 வயது காவலர், பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரை, அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேற்கண்ட குடியிருப்பில் 40 காவலர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை எந்தவித பரிசோதனையும் செய்யவில்லை, கிருமி நாசினி கூட தெளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரி உள்பட 6 பேருக்கு நோய் தொற்று
புழல் அடுத்த லட்சுமிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த 53 வயது நபர் ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும், இவரது 48 வயது மனைவி, 26 மற்றும் 24 வயது மகன்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த, புத்தாகரம் வானவன் நகரை சேர்ந்தவரின் 13 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் அடுத்த  கதிர்வேடு செந்தில் நகர், 2வது தெருவை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரையும் அதிகாரிகள்  மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags : Grocery store ,Coimbatore ,Sholinganallur ,Corona , Koyambedu, vegetable, grocery shopkeeper, Corona, Sholinganallur
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்