×

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்காததால் ஆந்திரா, கர்நாடகாவுக்கு படையெடுத்த குடிமகன்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி

சென்னை: கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒயின் ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தை சேர்ந்த குடிமகன்கள் ஆந்திரா, கர்நாடக எல்லையில் உள்ள மதுக்கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும்  2 கி.மீ. தூரம் வரை பொறுமையாக நின்று குடிமகன்கள் மதுவை வாங்கிச் சென்றனர்.  ஆந்திராவில் 25 சதவீதம் விலை உயர்த்தி மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைத்து, காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை மது விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.

இதேபோல் கர்நாடகாவிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  இதனால் தமிழக குடிமகன்கள் பைக், கார் என்று கிடைத்த வாகனங்களில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு மது வாங்க அதிகாலையிலேயே பறந்தனர். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி மற்றும் தாசுகுப்பத்தில் உள்ள மதுக்கடைகளில் சரக்கு வாங்குவதற்காக  ஊத்துக்கோட்டை, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்றனர்.  ஊத்துக்கோட்டை - சத்தியவேடு சாலையில் போலீஸ் சோதனைச்சாவடியில் குடிமகன்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். ஆனால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஆந்திர - தமிழக எல்லையின் குறுக்கே உள்ள ஏரிக்கால்வாய் வழியாக சென்று மது வாங்கி வந்தனர்.

இதையடுத்து ஊத்துக்கோட்டை - தாசுகுப்பம் எல்லையில் போலீசார் சீல் வைத்தனர். அதை மீறி குடித்துவிட்டு ஊத்துக்கோட்டைக்கு வந்த குடிமகன்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். குடிமகன்கள் குவிந்ததால் கடை மூடல்: சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர எல்லையான பனங்காடு, சத்தியவேடு, ராமாபுரம், சுண்ணாம்புகுளத்தில், நேற்று அதிகாலை முதலே மதுப்பிரியர்கள் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி பஜார், மங்காவரம், மாதர்பாக்கம், புதுவாயில், பொன்னேரி, மீஞ்சூர் தச்சூர் கூட்டு, சாலை, பூங்குளம், உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் முதல் முதியவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.  இதையறிந்த ஆந்திர போலீசார், சுமார் இரண்டு மணி நேரம் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முடியவில்லை.

எனவே, மதுப் பிரியர்களால் தொல்லையால் மது கடைகளை திறந்த சில மணி நேரத்திலேயே மூடிச்சென்று விட்டனர். மேலும் எல்லை தாண்டாமல் இருக்க எல்லையில் முள்வேலி, சாலையில் குழி வெட்டுவது போன்ற நடவடிக்கைகளில் போலீசார், வருவாய் துறையினர் இறங்கினர். பறித்து குடித்த செக்போஸ்ட் அதிகாரிகள்: ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் நண்பர்களுக்கு போன் செய்து வாங்கி வைத்த மதுபானங்கள், தங்களை ஹீரோ நினைத்து மாநில எல்லைகளை கடந்து சென்ற மதுபானங்களை வாங்கிக் கொண்டு தமிழக எல்லைக்கு திரும்பினர். அப்போது சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகள் பை, பைக், கார் டிக்கிகளை சோதனை செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். குறிப்பாக ஒவ்வொருவரிடமும் ஒன்று அல்லது இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மற்றவற்றை அவர்களிடமே கொடுத்து மீண்டும் வரக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். பறிமுதல் செய்த மதுவை அவர்கள் தங்கள் சொந்த தேவைக்கு எடுத்து கொண்டனர். ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறுமை காத்து வாங்கிய பெண்கள்: கிருஷ்ணகிரி  -கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் செயல்படும் மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிகளவில் திரண்டனர். பெண்களும் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டது. ஆளுக்கு ஒரு புல் என்ற கணக்கிலேயே பாட்டில் கிடைத்தது.

மூன்று மணிநேரம் கால் கடுக்க காத்திருப்பு
திருவள்ளூர் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளுக்கு அருகில் மது விற்பனை தொடங்கியது. அதை வாங்க தமிழக குடிமகன்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மது வாங்கி சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் கட்டுப்படுத்த முடியாமல் கனகம்மாசத்திரம் அருகேயுள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது.

அடி வாங்கியும்...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் பாலசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதையறிந்த சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான குடிமகன்கள் மதுக்கடை முன் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே மதுக் கடையையொட்டி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நாகபூண்டி பகுதி மூடப்பட்டதால் பெரிய பள்ளங்களை வெட்டி தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் மதுப்பிரியர்கள் 2 கிலோமீட்டர் தூரம் மாற்று வழியில் ஆந்திர மாநில எல்லைக்கு சென்று மது வாங்க குவிந்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் மதுக்கடையை மூடி ‘சீல்’ வைத்தனர்.

Tags : Citizens ,Karnataka ,liquor stores ,Andhra ,Tamil Nadu ,crowd , Tamil Nadu, liquor shops, Andhra Pradesh, Karnataka, police
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...