×

நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க தமிழகத்தில் நிலத்தடி நீர் ஆணையம் அமைகிறது

* விதிமுறை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம்*  தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரைெசன்னை: நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்கதமிழகத்தில் நிலத்தடி நீர் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு, நிலத்தடி நீர் வணிக ரீதியாக திருடப்படுவதே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, நிலத்தடி நீர்வள  ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் மாநிலம் முழுவதும் அதிநுகர்வு பகுதி, அபாயகரமான பகுதி, பாதுகாப்பான பகுதி என பிரிக்கப்பட்டன. அதில், அதிநுகர்வு மற்றும் அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 541 பிர்காக்களில் நிலத்தடி நீர் எடுக்க தற்போது வரை தடை உள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் சட்ட விரோதகமாவும், அனுமதியின்றியும் நிலத்தடி நீர் திருடப்படுவது தொடர்கதையாகி வந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், நிலத்தடி நீர் மட்டத்தை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள், குடிநீர் கேன் ஆலைகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில், நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையத்துக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லாத நிலையில், தற்காலிகமாக மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் தான் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் தான் தற்போது ஆலைகளில் புளோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதா, அனுமதி அளிக்கப்பட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கப்படுகிறதா, சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறதா?  என்பது தொடர்பாக ஆய்வு செய்கிறது. இந்த நிலையில், இப்பணிகளை நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்  மேற்கொள்ளும் வகையில், அதன் கீழ் நிலத்தடி நீர் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆணையத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த ஆணையம் தான் நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகளுக்கு தடையில்லாத சான்று வழங்குவது, நிலத்தடி நீர் திருடப்படுவது தெரிய வந்தால், அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பது, அபராதம் வசூலிப்பது, சிறை தண்டனைக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் கொண்ட ஆணையமாக இது இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியில் மாநில  நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது, தமிழகத்திலும் நிலத்தடி நீர் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும். நிலத்தடி நீர் திருட்டை தடுக்க இந்த ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்துவது, நிலத்தடி நீர் திருட்டு தடுக்கப்படும்’ என்றார்….

The post நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க தமிழகத்தில் நிலத்தடி நீர் ஆணையம் அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Grainwater Commission ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Underground Water Commission ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...