×

கொரோனா செய்த மாயம் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை கிடுகிடு

புதுடெல்லி:  கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தொடர்ந்து 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆயுர்வேத மருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன என தகவல்கள் வெளியாகின. ஆயுஷ்  அமைச்சகமும் இதை உறுதிப்படுத்தியது. அதோடு, ஆயுர்வேத மருந்துகள் சிலவற்றை பரிந்துரை செய்தது.  இதை தொடர்ந்து, ஆயுர்வேத பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து விட்டது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செவன்பிராஷ், தேன்,  அமிர்தவல்லி இலையில் செய்த மாத்திரைகள், சூரணம், அஸ்வகந்தா மாத்திரைகள் ஆகியவற்றுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

 இதுகுறித்து ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:   உடல் நலத்தை மேம்படுத்தக்கூடிய ஆயுர்வேத தயாரிப்புகளின் தேவை அபாரமாக உயர்ந்துள்ளது. அதிலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய  மருந்து, லேகியத்துக்கு தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது.  தவிர, சீந்தில் கொடி, துளசி, நெல்லிக்காய், அஸ்வகந்தா போன்றவை அதிகம் உள்ள தூய  மூலிகை தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.  இது மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து டானிக், ஊட்டச்சத்து  பானங்களுக்கும் வரவேற்பு உள்ளது. கொரோனா வந்த பிறகு, சானிைடசர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. துவக்கத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை மக்கள் வாங்கிச்  சென்றனர்.

அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகு, வேம்பு உள்ளிட்ட மூலிகை கலந்த சானிடைசர்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. சில மூலிகை  சானிடைசர்கள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சந்தையில் உள்ளன. இருப்பினும், தற்போது இவற்றின் விற்பனை அபாரமாக  உள்ளது.  ஏற்கெனவே, ஆயுர்வேத மருந்து பொருட்களின் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதிலும், ஆயுஷ் அமைச்சகம், கொரோனாவில்  இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தொடர்பாக வழிமுறைகளை வெளியிட்டது. அதில், கொரோனா வேகமாக பரவுவதால் உலகளவில்  மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, உகந்த  ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பூண்டு போன்ற மசாலாப் பொருட்கள் சமைக்க பரிந்துரைக்கப்படுகின்றன.    துளசி, இலவங்கப்பட்டை, குறுமிளகு, சுக்கு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர், ஒரு நாளைக்கு ஒரு முறை  அல்லது இரண்டு முறை குடிக்கலாம் என பரிந்துரைகளை வெளியிட்டது. இதன்பிறகுதான் ஆயுர்வேத தயாரிப்பு பொருட்கள் அமோக வரவேற்பு  ஏற்பட்டு விற்பனை அதிகரித்துள்ளது என, ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

Tags : Corona , Corona, Ayurvedic products
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...