×

சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்கள் வீட்டில் இருந்தபடி இணையத்தில் தரிசிக்கலாம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண திருவிழா இன்று நடக்கிறது. விழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே இணையதளம் மூலம் கண்டு  தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான  பக்தர்களின் கூட்டம் காணப்படும். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா திட்டமிட்டபடி ஏப். 25ம் தொடங்கி நடந்திருந்தால் மீனாட்சியம்மனுக்கு  நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்று இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், திருக்கல்யாணம் மட்டும் இன்று  நடக்கிறது.

காலை 9.05 மணியில் இருந்து 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில்  திருக்கல்யாணம் பக்தர்கள் இல்லாமல் நடக்கிறது. அங்கு 4 பட்டர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை  நடத்துகிறார்கள். இந்த வைபவத்தை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org-ல் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, மீனாட்சி திருக்கல்யாணத்தை காணலாம். மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் முடிந்தவுடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கிவிடும். தற்போது, அழகர்கோவில் சித்திரை திருவிழாவும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

மங்கல நாண் மாற்றுவது எப்படி?
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து, அவருக்கு மங்கல நாண் சூட்டும் வேளையில் பெண்களும் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.  தனது கணவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். காலம், காலமாக நடைபெறும் இத்திருவிழவை, இந்தாண்டு பெண்கள்  காண முடியாது என்பதால் கோயில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும்போது, வீட்டில் இருந்தே பெண்கள் சுவாமியை வேண்டி மங்கல நாண்  மாற்றிக்கொள்ளலாம். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் நாம் எப்படி மக்களுக்கு விருந்து சாப்பாடு போடுகிறோமோ அதேபோன்று வீட்டிலேயே விருந்து  தயார் செய்யலாம். அதில் சுவாமிக்கு வடை, பாயாசத்துடன் விருந்து படைத்து வீட்டிலேயே அமர்ந்து சாப்பிடலாம் என பட்டர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : pilgrimage ,Meenakshi ,Madurai , chithirai festival cancellation, Meenakshi pilgrimage, devotees
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...