×

உரிமையாளர் சோறு போடவில்லையா? முட்கரண்டியை விழுங்கிய நாய்: ‘எண்டோஸ்கோப்’ மூலம் அகற்றி சாதனை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு நாய் முட்கரண்டியை விழுங்கி விட்டது. ‘எண்டோஸ்கோப்’ மூலம் அந்த முட்கரண்டியை அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவில் உள்ள விலங்குகள் அவசர மையத்திற்கு ஆபத்தான ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் கால்நடை மருத்துவரிடம் பேசிய நபர், ‘எனது டஸ்டின் நாய் ஒரு உலோக முட்கரண்டியை விழுங்கிவிட்டது. உடனடியாக நாயை காப்பற்ற வேண்டும்’ என்று கூறினார். உடனடியாக அடிலெய்ட் அனிமல் எமர்ஜென்சி அண்ட் ரெஃபரல் சென்டருக்கு, அந்த நாய் கொண்டு வரப்பட்டது.

மருத்துவக் குழுவினர் நாயின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, அந்த நாய் ஒரு முட்கரண்டியை விழுங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த கால்நடை மருத்துவர்கள், இரண்டு விதமான வழிமுறைகளை கையாள விரும்பினர். அதில் ஒன்று ‘எண்டோஸ்கோப்’ வழியாக முட்கரண்டியை அகற்றுவது அல்லது அறுவை சிகிச்சை செய்து முட்கரண்டியை அகற்றுவது. ஒருவழியாக  ‘எண்டோஸ்கோப்’ வழியாக முட்கரண்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்பின் ஒரு மருத்துவக் குழுவினர் ஒன்றிணைந்து நாயின் வயிற்றில் இருந்த முட்கரண்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

முட்கரண்டியை அகற்றும் சம்பவத்தை, அடிலெய்ட் அனிமல் எமர்ஜென்சி அண்ட் ரெஃபரல் சென்டர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பியது. எதனால், நாய் முட்கரண்டியை விழுங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், ‘நாயின் உரிமையாளர் அதற்கு சரியாக உணவு அளித்திருந்தால் எதற்காக முட்கரண்டியை நாய் விழுங்க வேண்டும்?’ என்று, பலரும் அதன் உரிமையாளரை கண்டித்தனர். சிலர், மருத்துவக் குழுவினரை பாராட்டினர். இந்த பேஸ்புக் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Tags : owner ,Adventurer , Fork, dog, endoscope
× RELATED பார் உரிமையாளர்களிடம் ரூ.25 கோடி லஞ்சம்:...