×

ராஜிவ்காந்தி, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற முதியவர், இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: வளசரவாக்கத்தை சேர்ந்த 67 வயது முதியவர் கடந்த 13ம் தேதி அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கடந்த 20ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதைதொடர்ந்து அவர் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே முதியவர் மூலம் புற்றுநோய் மருத்துவமனையில் உடன் இருந்த 26 வயது கொண்ட அவரது மகனுக்கும் கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதியானது. அதைதொடர்ந்து அவரது மகனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 24ம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஆன்லைனில் உணவு வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் அவர் கடந்த 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். குறிப்பாக 130க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அவர் உணவு விநியோகம் செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் பணியாற்றிய நிறுவன ஊழியர்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகின்றனர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் உணவு டெலிவெரி செய்த முகவரி பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பட்டியலின் படி உணவு வழங்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 27ம் தேதி இரவு 11 மணிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். அதில் அவர் மயக்க நிலை அடைந்து இளம் பெண் மற்றும் பிறந்த குழந்தை என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் தாய் மற்றும் இறந்த குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று நேற்று அடக்கம் செய்தனர்.

மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் இறந்த பெண்ணின் ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து இறந்த இளம் பெண்ணின் கணவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.


Tags : Rajiv Gandhi ,Kasturba Gandhi Government Hospital , Rajiv Gandhi, Kasturba Gandhi Government Hospital, Corona, Elderly, Young Woman, Death
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...