×

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது: தமிழக அரசு விளக்கம்

சென்னை:  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு 24.4.2020 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம்குறித்து வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை சம்பந்தமாக கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாககாவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

அதில்ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரிநடுவர்மன்றம் 5.2.2007ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது. மத்திய அரசு மே, 2019ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும்கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம்ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தைஉருவாக்கியது.

இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளகாவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.  மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள்,நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடியபொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.

பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒருவழக்கமான நடைமுறையாகும். இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள்மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின்நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றுதெளிவுபடுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery Water Management Commission ,Cauvery Water Management Authority ,Ministry of Jal Sakthi ,Tamil Nadu , Cauvery Water Management Authority, Jal Sakthi Ministry, Govt
× RELATED 3.6 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க...